• Thu. Nov 12th, 2026

தழும்பில்லா எண்டோஸ்கோப்பி சிகிச்சை தனியார் மருத்துவமனை சாதனை..,

ByPrabhu Sekar

Nov 12, 2026

திட உணவு மற்றும் திரவங்களை விழுங்க முடியாமல் அவதிப்பட்டு வந்த 8 வயது சிறுவனுக்கு, தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக ‘போயம்’ (POEM – Per Oral Endoscopic Myotomy) என்ற மேம்பட்ட எண்டோஸ்கோப்பி சிகிச்சையை குரோம்பேட்டையில் தனியார் மருத்துவமனை வெற்றிகரமாக செய்துள்ளது.

இச்சிறுவனுக்கு ‘டைப் 2 அகலேசியா கார்டியா’ என்ற அரிய வகை உணவுக்குழாய் அடைப்பு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் குழந்தைகளில் 0.1 முதல் 0.18 பேரை மட்டுமே பாதிக்கும் மிக அரிதான நோயாகும்.

பெரியவர்களுக்கு இந்த சிகிச்சை வழக்கமானது என்றாலும், குழந்தைகளின் உணவுக்குழாய் மிகச் சிறியதாகவும், திசுக்கள் மென்மையாகவும் இருப்பதால், குழந்தைகளுக்கு செய்வது மிகவும் சவாலானது.

இந்த சிகிச்சையை மருத்துவ இரைப்பை குடலியல் துறை மருத்துவரும், எண்டோஸ்கோப்பிக் அறுவை சிகிச்சை நிபுணருமான டாக்டர் செந்தூரன் தலைமையிலான குழு, மயக்கவியல் நிபுணர்கள், குழந்தைகள் நல மருத்துவக் குழு மற்றும் செவிலியர்கள் ஆதரவுடன் சுமார் 50 நிமிடங்களில் வெற்றிகரமாக செய்து முடித்தது.

சிகிச்சைக்குப் பிறகு 24 மணி நேரத்திற்குள் சிறுவனால் திரவம் அருந்தவும், அதனைத் தொடர்ந்து மென்மையான உணவு உண்ணவும் முடிந்தது. அவன் திருப்திகரமாக குணமடைந்து வீடு திரும்பினான்.

டாக்டர் செந்தூரன் கூறுகையில், “குழந்தைகளின் உணவுக்குழாய் சிறியதாகவும் குறுகியதாகவும் இருப்பதால், போயம் சிகிச்சைக்கு சிறப்பு தொழில்நுட்பத் திறனும் துல்லியமும் தேவை. இந்த சாதனை, இந்த அரிய நோயால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு தழும்பில்லாத நவீன சிகிச்சை அளிப்பதில் முக்கிய முன்னேற்றம்” என்றார்.