உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி காகுந்த் அரவிந்த் தர்மாதிகாரி திறந்து வைத்தார்!
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில், சுமார் 20 ஆண்டுகளாகப் போதிய அடிப்படை வசதிகளின்றி இயங்கி வந்த நீதிமன்றத்திற்கு மாற்றாக, ரூ.11 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் திறப்பு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி காகுந்த் அரவிந்த் தர்மாதிகாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு புதிய நீதிமன்றக் கட்டிடத்தைத் திறந்து வைத்தார்.
தொடர்ந்து விழாவில் ஆங்கிலத்தில் உரையாற்றிய தலைமை நீதிபதி, தேனி மாவட்டத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியும் மனநிறைவும் அடைவதாகத் தெரிவித்தார்.

மேலும், நீதிமன்றக் கட்டிடம் என்பது வெறும் செங்கல், சிமெண்ட் மற்றும் கம்பிகளால் உருவாக்கப்பட்ட கட்டிடம் மட்டுமல்ல என்றும், தொலைதூரக் கிராமங்களில் வசிக்கும் எளிய மக்களும் எளிதாக நீதியைப் பெறுவதற்கான உத்தரவாதம் என்றும் குறிப்பிட்டார்.
தலைநகரில் மட்டும் ஓடும் நதி கிராமப்புற விவசாய நிலங்களைச் செழிக்கச் செய்ய முடியாது. அதுபோல நீதி என்பதும் ஒவ்வொரு கிராமத்தின் வாசலுக்கும் சென்றடைய வேண்டும் எனத் தனது உரையில் வலியுறுத்தினார்.
மேலும், இந்த நீதிமன்ற வளாகத்தில் சைக்கிள் நிறுத்தும் வசதிகூட ஏற்படுத்தப்பட்டிருப்பது, சைக்கிளிலோ, நடந்தோ அல்லது பேருந்திலோ வரும் சாதாரண மக்களின் தேவைகளையும் கருத்தில் கொண்டு இந்தக் கட்டிடம் அமைக்கப்பட்டிருப்பதைக் காட்டுவதாகப் பாராட்டினார்.
ஏழை மனுதாரர்கள், வயதான பெண்கள், நிலப் பிரச்சினைகளில் சிக்கிய விவசாயிகள் மற்றும் நீதிக்காகக் காத்திருக்கும் அனைவருக்கும் இந்த நீதிமன்றம் நம்பிக்கையின் ஒளிவிளக்காகத் திகழ வேண்டும் என்றும் தெரிவித்தார்.
மேலும், குறுகிய காலத்தில் இந்தப் பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி முடிக்கப் பாடுபட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினருக்கு தனது மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற நிர்வாக நீதிபதி வேல்முருகன், நீதிபதிகள் அப்துல் குத்தூஸ், முகமது ஷபிக், தேனி மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் கவுதம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக, இந்த நீதிமன்றக் கட்டிடம் வெறும் நினைவுச்சின்னமாக இல்லாமல், ஒவ்வொரு நாளும் நேர்மையும் நீதியும் நிலைநாட்டப்படும் பணிமனையாகத் திகழ வேண்டும் எனத் தனது உரையை நிறைவு செய்தார்.
ஆண்டிப்பட்டி மக்களின் நீண்டகாலக் கோரிக்கைக்கு தீர்வு காணும் வகையில் திறக்கப்பட்டுள்ள இந்தப் புதிய ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டிடம், அப்பகுதி மக்களின் நீதித்துறை சேவையை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.