• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே

ஒரு சமூக சீர்திருத்தவாதியும், கவிஞரும் ஆவார். இவர் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர். இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், பெண் கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவிற்கருகிலுள்ள பிடெவாடாவில் 1848 ஆம் ஆண்டு நிறுவினர்.


இந்த பெண் தினமும் இரண்டு புடவைகளைத் தன்னோடு எடுத்துக்கொண்டு பள்ளிக்கு கிளம்புவாள். ஏனெனில் அவள் தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததுமே, வழி நெடுங்கிலும் சாதிஇந்து வெறியர்கள் சாணத்தையும், சேற்றையும், மலத்தையும் வாரி அவள் மீது வீசுவார்கள். அவற்றை அமைதியாக எதிர்கொண்டு தனது பள்ளிக்கு வந்ததும் புடவையை மாற்றிக்கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுக்கொடுப்பார்.


கல்வியின் அவசியத்தை உணர்ந்து, பெண்களுக்கு கல்வி கற்பித்தாள்.ஒடுக்கப்பட்ட மற்றும் விதவை பெண்களுக்கும் கல்வியின் வழியே புது பாதையை அமைத்துகொடுத்தாள். அனைவரும் சமம் என்ற மனிதநேயத்தை தூக்கிப்பிடித்தாள். அவளே இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே. இவரின் 191ஆவது பிறந்த தினம் சனவரி 03 2022 அன்று வருகின்கது. சாவித்திரி புலே பற்றிய தகவல்களை இங்கு தெரிந்துகொள்ளலாம்.


1831ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும் சிற்றூரில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சாவித்திரி புலே. இவர் கல்வி வாய்ப்பு இல்லாத சமூகத்தைச் சேர்ந்தவர். அந்த காலத்தில் குழந்தை திருமணம் வழக்கில் இருந்தது.
1840ஆம் ஆண்டு தனது ஒன்பதாம் வயதில் ஜோதிராவ் புலேவை (வயது 13) மணந்தார் சாவித்திரிபாய். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. ஒரு பிராமண விதவையின் யஸ்வந்த் ராவ் என்ற குழந்தையைத் தத்தெடுத்து வளர்த்தனர்.

ஜோதிராவ் புலே ஒரு சமூகப் போராளி. அக்காலத்தில் உயர்சாதியினருக்கு மட்டுமே கல்வி வழங்கப்பட்டது. பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் கல்வி கற்க கூடாது என்ற விதிமுறைகளை விதித்து வைத்திருந்தனர் சாதி இந்துக்கள். அதை எதிர்த்துப் போராடியவர் ஜோதிராவ் புலே. தன்னுடைய இந்த போராட்டத்தில் சாவித்திரிபாயையும் இணைத்துகொண்டார்.


சாவித்திரி பாய்க்கு நான்கு ஆண்டுகள் கல்வி கற்றுக்கொடுத்தார் ஜோதிராவ் புலே. கல்வி மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் விதவை பெண்களுக்கும் கல்வியைக் கொடுக்க இருவரும் புறப்படுகிறார்கள். ஜோதிராவ் புலே 1846ஆம் ஆண்டில் ஒரு பள்ளியை தொடங்கி சாவித்திரிபாயுடன் பாத்திமா ஷேக் என்ற பெண்ணையும் சேர்த்து ஒடுக்கப்பட்ட பெண்களுக்குக் கல்வி கற்பித்தனர். 1848ஆம் ஆண்டு சாவித்திரிபாய் ஆசிரியர் பயிற்சி பெற்றார். வரலாற்றிலேயே முதன் முறையாக இந்தியாவில் பெண் குழந்தைகளுக்கான பள்ளியை புனேவில் 1848ஆம் ஆண்டு தொடங்கினார்கள். ஒன்பது மாணவிகளுடன் தொடங்கப்பட்ட அப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பணியாற்றினார் சாவித்திரிபாய் புலே.


பழமைவாதிகளும் உயர்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். அவர் மீது சேற்றினையும், சாணத்தையும், மலத்தினையும் வீசிப் பல தொல்லைகள் கொடுத்தனர். அதை அத்தனையையும் பொறுத்துக்கொண்டு, ஜோதிராவ் புலேவிடம் கூறினார் சாவித்திரிபாய் புலே. “தினமும் பள்ளி செல்லும்போது பழைய ஆடைகளை அணிந்து கொண்டு செல்! பள்ளி சென்று பின் வேறோர் புடவையை மாற்றிக்கொள்!” என்று கணவர் சொன்னதையே பின் பற்றி கல்விப் பணியாற்றினார்.


அக்காலத்தில் குழந்தை திருமணத்தால் விதவையான பெண்களுக்கு மொட்டையடிக்கும் கொடுமையான பழக்கம் வழக்கத்தில் இருந்தது. இதைக்கண்டித்து நாவிதர்களை திரட்டி, 1863 ஆம் ஆண்டு மிகப் பெரிய போராட்டத்தினை நடத்தி அதில் வெற்றி பெற்றார் சாவித்திரி. மேலும், விதவை பெண்களுக்கு மறுமணமும் செய்து வைத்தார்.

1852இல் சாவித்திரிபாய் தொடங்கி வைத்த “மஹிளா சேவா மண்டல்” (பெண்கள் சேவை மையம்) மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை வளர்ப்பதில் முக்கிய பங்காற்றியுள்ளது. 1870ஆம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தினால் அனாதைகளான 52 குழந்தைகளுக்கு உறைவிடப் பள்ளியை நடத்தினார் சாவித்திரிபாய்.
1897இல் மகாராஷ்டிரா மாநிலத்தில் பிளேக் நோய் தாக்கியதில் பல மக்கள் நோயுற்றனர்.

ஆங்கிலேய அரசு சிறப்புச் சட்டம் போட்டு நோயுற்ற மக்களை ஒதுக்கி வைத்து பிறரைப் பாதுகாத்தது. பிளேக் தொற்று நோயால் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சையளிப்பதற்காக, சாவித்திரிபாய் புலேயும் அவரது வளர்ப்பு மகனும் மருத்துவருமான யஷ்வந்தும் ஒரு மருத்துவமனையை அமைத்தனர். புனேக்கு அருகிலுள்ள சாசனே மலா (ஹடாப்சர்) என்ற ஊருக்கு வெளியே தொற்றுநோய் பாதிப்புக்கு உட்படாத இடத்தில் அம்மருத்துவமனை இருந்தது.
நோயால் அவதிப்பட்டவர்களைத் தோளில் சுமந்து வந்து தன் மகனின் மருத்துவமனையில் வைத்தியம் பார்க்க உதவி செய்தார். இப்பணியில் அவருக்கும் நோய்த் தொற்று ஏற்பட்டு மார்ச் 10, 1897 இல் இயற்கை எய்தினார். தன் இறுதி நாள் வரை சமூக மக்களுக்காக சேவை செய்த இம்மனிதரின் பிறந்த தினத்தை அனைவரும் சேர்ந்து கொண்டாடுதலே சிறப்பானது.


பெண் சமூக சீர்திருத்தவாதிகளைச் சிறப்பிக்கும் வகையில், மகாராஷ்டிரா அரசு சாவித்திரிபாய் புலேயின் பெயரில் ஒரு விருதினை அறிவித்திருக்கிறது. 2015 இல் புனே பல்கலைகழகத்தின் பெயர் சாவித்திரிபாய் புலே பல்கலைக்கழகம் என மாற்றப்பட்டது. இந்திய அஞ்சல் துறையானது 1998ஆம் ஆண்டு மார்ச் 10இல் சாவித்திரிபாய் புலேவை பெருமைப்படுத்தும் விதமாக ஒரு அஞ்சல் தலையை வெளியிட்டது.

கல்விக்காக பல கொடுமைகளை தாங்கிக்கொண்டு மறுக்கப்பட்டவர்களுக்கு கல்வி வழங்கிய சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் புலேவின் பிறந்த தினத்தை ஆசிரியர் தினமாக கொண்டாட தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.