• Sat. May 4th, 2024

டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்பு

ByA.Tamilselvan

Mar 26, 2023

இந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்பு
பிரதமர் மோடியை ராகுல்காந்தி அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த அவதூறு பேச்சு குறித்து குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள தலைமை குற்றவியல் கோர்ட்டில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் கடந்த 23-ந்தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. ராகுல்காந்தி குற்றவாளி என அறிவிக்கப்பட்டு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் கோர்ட்டு அதிரடி தீர்ப்பை அளித்தது. 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. பாராளுமன்ற மக்களவை செயலகம் இந்த நடவடிக்கையை எடுத்தது. ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து காங்கிரசார் இன்று நாடு முழுவதும் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10 மணியளவில் இந்த போராட்டம் தொடங்கியது. மாநில தலைநகரம், மாவட்ட தலைநகரங்களில் காந்தி சிலை முன்பு நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரசார் பெரும் திரளாக பங்கேற்றனர் . இந்த நிலையில் காங்கிரஸ் போராட்டம் நடத்த இருந்த ராஜ்காட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த பகுதியில் சத்தியாகிரக போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் காங்கிரசார் சத்தியாகிரகத்துக்கு அனுமதி தர முடியாது என்று போலீசார் தெரிவித்தனர். போலீசாரின் தடையை மீறி காங்கிரசார் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டனர். காந்தி நினைவிடம் அருகே நடந்த இந்த சத்தியாகிரகத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *