• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சசிகலா – ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரருடன் சந்திப்பு?

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா தனது தென் மாவட்ட பயணத்தை இன்று தொடங்கினார்.

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சமீபத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில், அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு கட்சியை பலப்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் அதிமுகவில் இரட்டை தலைமை தான் தோல்விகளுக்கு காரணம் என்றும் சசிகலா தலைமையின் கீழ் அதிமுக வரவேண்டும் என்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ஆறுகுட்டி பேட்டியளித்தார்.

இதை தொடர்ந்து அதிமுகவில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலாவுக்கு ஆதரவு குரல்கள் அதிமுகவில் அதிகரித்து வருவதால் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் முடிவு என்ன என்பது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே சசிகலா தனது தென் மாவட்ட சுற்றுப் பயணத்தை இன்று தொடங்கியுள்ளார்.

சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் சசிகலா பின்னர் திருநெல்வேலி கே.டி.சி. நகர் பாலம், நாங்குநேரி, வள்ளியூர், ராதாபுரம் வழியாக விஜயாமதி செல்லவுள்ளார். அங்கிருக்கும் விஸ்வாமித்திரர் கோவிலில் வழிபாடு நடத்தும் சசிகலா, அதனை தொடர்ந்து திருச்செந்தூர் செல்லவுள்ளார்.

நாளை இலஞ்சிகுமாரர் கோவிலுக்கு செல்லும் சசிகலா, அங்கிருந்து புறப்பட்டு மதுரை விமான நிலையம் சென்று சென்னை செல்லவுள்ளார். இந்த பயணத்தின்போது அதிமுக தொண்டர்களை அவர் சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேபோல், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ.பி.ராஜா சசிகலாவை சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே இன்று காலை சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒரே குடும்பத்து பிள்ளைகள். நிச்சயம் பிள்ளைகளை சந்திப்பேன் என்று கூறினார்.