சொத்துகுவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்துவிட்டு வெளியே வந்த சசிகலா சில காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். தேர்தல் நேரத்தில் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்த சசிகலா தற்போது மீண்டும் லைம் லைட்டிற்கு வந்துள்ளார். அதிமுகவை மீட்பேன், கட்சியை மீண்டும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவேன் என்று சசிகலா பேசி வருகிறார்.
அதிமுக, அமமுக தொண்டர்களுடன் போனில் பேசி வந்த சசிகலா தற்போது நேரடியாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். கடந்த சில நாட்களாக கழக பொதுச்செயலாளர் என்ற பெயரில் இவர் அறிக்கை வெளியிட்டு வருகிறார். அதோடு கழக பொதுச்செயலாளர் என்று பெயர் பொறிக்கப்பட்ட காரில், அதிமுக கொடி தாங்கி இவர் அதிமுக பொன் விழாவின் போது எம்ஜிஆர் நினைவு இல்லத்திற்கும், ஜெயலலிதா சமாதிக்கும் என்று மரியாதை செலுத்தினார்.
இதனிடையே நேற்று பேட்டி அளித்த அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும் சசிகலாவை கட்சியில் சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் சேர்ந்து முடிவு எடுப்பார்கள் என்று கூறினார். ஆனால் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி ஆகியோர் சசிகலாவிற்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்கள். சசிகலாவை கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை என்று தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில்தான் அதிமுக கொடி கட்டிய காரில் சசிகலா இன்று தனது ஒருவார கால அரசியல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். இன்றைய தினம் சசிகலா தஞ்சாவூர் செல்கிறார். செல்லும் வழியில் மொத்தம் 25 இடங்களில் சசிகலா தொண்டர்களை சந்திக்க உள்ளார். அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளார். கட்சி நிர்வாகிகளிடம் அதிமுகவை மீட்பது குறித்து சசிகலா ஆலோசனை செய்வார் என்று எதிர்பார்க்கப்படுதுகிறது.
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நாளை தஞ்சாவூரில் நடக்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் நாளை சசிகலா கலந்து கொள்கிறார்.
அதன்பின் அங்கிருந்து 28ம் தேதி மதுரைக்கு சென்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு அதிமுக, அமமுக நிர்வாகிகளை சசிகலா சந்திக்க உள்ளார். அதன்பின் அங்கிருந்து ராமநாதபுரத்திற்கு சசிகலா செல்கிறார். வருகிற 29ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் சசிகலா மரியாதை செலுத்துகிறார். இதில் பல கட்சி நிர்வாகிகள், ஜாதி ரீதியான தலைவர்களை சசிகலா சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுகவை மீட்பேன் என்று சசிகலா குறிப்பிட்டு இருந்த நிலையில் தனது முதல் கட்ட அரசியல் பயணத்தை இன்று தொடங்கியுள்ளது அதிமுகவினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.