தாம்பரம் மாநகராட்சி நான்காவது மண்டலத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வெகு விமர்சையாக பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் உற்சாகமாக பங்கேற்று வரும் இந்த விழாக்கால சூழலில், மறுபுறம் தூய்மை பணியாளர்களின் வாழ்வாதார கோரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை பல மாதங்களாக வழங்கப்படவில்லை என கூறி, அதனை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாம்பரம் மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த தூய்மை பணியாளர்கள் இன்று காலை காத்திருந்தனர்.
அவர்கள் அமைதியான முறையில் தங்கள் கோரிக்கையை தெரிவிக்க முயன்ற நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் அலுவலர்களை கொண்டு போராட்டத்திற்கு தயாராக இருந்த தூய்மை பணியாளர்களை தடுத்து நிறுத்தி, அங்கிருந்து விரட்டி அடித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் அந்த பகுதியில் சில நேரம் பரபரப்பு ஏற்பட்டதுடன், தூய்மை பணியாளர்கள் மத்தியில் கடும் அதிருப்தியும் மனவேதனையும் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. “பண்டிகை காலத்தில் கூட எங்களுடைய உழைப்பிற்கான பணம் கிடைக்கவில்லை; அதைக் கேட்கவும் அனுமதி இல்லை” என்று அவர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

ஒருபுறம் பொங்கல் விழா கோலாகலமாக நடைபெறும் நிலையில், மறுபுறம் அன்றாடம் நகரை தூய்மையாக வைத்திருக்கும் பணியாளர்கள் தங்களுக்கான அடிப்படை உரிமையை கோரி போராட வேண்டிய சூழல் உருவாகியுள்ளது என்பது சமூக ஆர்வலர்களிடையே கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரத்தில் மாநகராட்சி நிர்வாகம் விரைந்து தலையிட்டு, தூய்மை பணியாளர்களின் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.




