• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

மறியலில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள்..!

Byவிஷா

Jul 13, 2023

சென்னையில், குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மளிகை முன்பு குப்பை அள்ளும் தொழிலாளர்கள் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு எற்பட்டது. இதையடுத்து, அங்கு மறியல் செய்ய 600 தொழிலாளர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் திமுக அரசு பதவி ஏற்றதில் இருந்து, ஆசிரியர்கள் உள்பட பல்வேறு அரசு பணிகளுக்கு முறையாக அலுவலர்களை நியமிக்காமல், குறைந்த சம்பளத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியிடங்களை நிரப்பி வருகிறது. மேலும், இந்த பணிகளை நியமிக்கவும், தனியார் ஏஜெண்டுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு பணம் வீணடிக்கப்படுகிறது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சி பகுதிகளில் குப்பை அள்ளும் பணிகளை தனியாரிடம் தாரை வார்க்க தமிழ்நாடு அரசு அறிவுறுத்தலின் பேரில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதற்கு குப்பை அள்ளும் தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இநத் நிலையில், தூய்மைப் பணியை தனியார் மயமாக்குவதை கண்டித்து, சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை முன்பாக சிஐடியு மாநிலச் செயலாளர் திருவேட்டை தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. அவர்கள் ரிப்பன் மாளிகையை முற்றுகையிட முயன்ற நிலையில், அங்கு பலத்த போலீஸார் குவிக்கப்பட்டு, ரிப்பன் மாளிகை வாயில்களைப் பூட்டி தடுப்பு வேலிகள் அமைத்தனர். பின்னர் தொழிலாளர்கள் அனைவரும் ரிப்பன் மாளிகை எதிரே உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்து, பின்னர் மாலையில் விடுவித்தனர்.

இந்த மறியல் போராட்டம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த திருவேட்டை, 10 ஆண்டுகள் பணிபுரியும் என்யுஎல்எம், தொகுப்பூதிய பணியாளர்கள், மலேரியா பணியாளர்கள், அம்மா உணவக தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். மாநிலம் முழுவதும் தூய்மை பணிகளை தனியார் மயமாக்க தமிழ்நாடு அரசு 3 ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் உள்ளாட்சிகளில் நிரந்தர பணியே இல்லாமல் போகும். சென்னையில் உள்ள 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி 2 பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்கள் முறையாக குப்பை எடுப்பதில்லை. இந்த நிலையில், எஞ்சியுள்ள 4 மண்டலங்களையும் தனியார்மயமாக்க மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
எனவே, தனியார் மயத்தை கண்டித்து மாநிலம் முழுவதும் மறியல் நடத்தப்பட்டது. தனியார் மய நடவடிக்கையால் சென்னையில் மட்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர். தனியார் மயத்தை திரும்ப பெறும் வரை இந்த போராட்டம் தொடரும். குப்பை அள்ளும் பணியை தனியாருக்குக் கொடுத்து, அரசு வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது. என்யுஎல்எம் தொழிலாளர்களுக்கு மாநகராட்சி நேரடியாக வேலை வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும் என பல கோரிக்கைளை வலியுறுத்தினார்.
பின்னர் சங்க நிர்வாகிகள், மாநகராட்சி மேயர் பிரியா, ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோரை செங்கொடி சங்கத்தினர் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் ஏற்கெனவே தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், பெருங்குடி, அடையார், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட 11 மண்டலங்களில் குப்பை அள்ளும் பணி தனியாரிடம் வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க நகர் ஆகிய மண்டலங்களிலும் குப்பை அள்ளும் பணியை தனியாரிடம் வழங்க மாநகராட்சி சார்பில் கருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.