
உலக ரத்ததான தினத்தை முன்னிட்டு, சென்னை போருர் அருகில் கெருகம்பாக்கம் கே.கே., பார்மசி கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இதில் மாணவர்கள் பலர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக் கழகத்துடன் இணைந்து நடத்தப்பட்ட முகாமிற்கு, கே.கே.பார்மசி கல்லூரியின் முதல்வர் டாக்டர்.மீனா தலைமை வகித்தார். கல்லூரியின் துணை முதல்வர் டாக்டர்.சாந்தி முன்னிலை வகித்தார். முகாமில் ரத்த தானம் செய்வதன் அவசியம் மற்றும் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விவரிக்கப்பட்டது.
“ஒரு உயிருக்கு முக்கியமாக இருப்பது ரத்தம் தான். ரத்த ஓட்டம் நிற்கும் போது அல்லது குறையும் போது உயிருக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் உண்டாகும். ஒரு உயிரைக் காப்பதில் ரத்தத்தின் பங்கு அவசியம் ஆகிறது. உலக உயிர்கள் உயிர் வாழ தண்ணீர் எவ்வளவு தேவையோ, அதைவிட அவசியமானது ரத்தம். உலகில் வாழும் பிற உயிர்களிடம் இல்லாத ஒரு விஷயம் ரத்தக்கொடை. மனிதர்களை தவிர்த்து வேறு எந்த ஜீவராசிகள் விபத்தாலோ வேறு சில சூழல்களாலோ ரத்தத்தை இழக்கக்கூடிய சூழல் வந்தால் அதற்கு வேறு ஒரு உயிருடைய ரத்தத்தை கொடுத்து உயிரை காப்பது இயலாத காரியம். மனிதர்களுக்கு மட்டுமே, ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதரின் ரத்தத்தை கொடுக்கலாம்” என்று ரத்த தானத்தின் முக்கியத்துவம் குறித்தும் விவரிக்கப்பட்டது.
கே.கே., பார்மசி கல்லூரியின் கல்வி நிலையத் தலைவர் டாக்டர்.செந்தில்குமரன் மேற்பார்வையில், கல்லூரியில் பயிலும் 56 மாணவர்கள் ரத்ததானம் வழங்கினர். அவர்களை ஊக்குவித்து பாராட்டும் விதமாக சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் ரத்ததானம் வழங்கிய மாணவர்கள், மீண்டும் இதே போல தொடர்ச்சியாக வழங்க உள்ளதாகவும் நெகிழ்ச்சியாக குறிப்பிட்டனர்.
