இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, சர்வதேச தொழில்முறை டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார். 2022 டென்னிஸ் சீசன் முடிவில் அவர் டென்னிஸ் வாழ்க்கையில் இருந்து விடைபெற உள்ளதாக கூறியிருக்கிறார்.
டென்னிஸ் விளையாட்டின் முன்னணி வீராங்கனையாக வலம் வந்த சானியா மிர்சா, தற்போது நடைபெற்று வரும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில், மகளிர் இரட்டையர் பிரிவில் முதல் சுற்றுடன் வெளியேறினார். முதல் சுற்றில் தோல்வியடைந்த பிறகு தனது ஓய்வு திட்டம் பற்றி அறிவித்தார்.அவர் கூறுகையில், “நான் ஓய்வு பெறுவதற்கு சில காரணங்கள் உள்ளன. இனி நான் விளையாடப் போவதில்லை என்பது போல் இது எளிமையானது அல்ல. நான் காயமடைந்தால் குணமடைந்து உடற்தகுதி பெற அதிக காலம் ஆகிறது. மேலும், எனது 3 வயது மகனுடன் அதிக நேரம் பயணம் செய்வதன் மூலம் அவனுக்கும் உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. அதையும் நான் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். என் உடல் சோர்வாக இருக்கிறது. இன்று என் முழங்காலில் அதிக வலி இருக்கிறது. இன்று நாங்கள் தோற்றதற்கு அதுதான் காரணம் என்று நான் சொல்லவில்லை. ஆனால் வயதாகிவிட்டதால் குணமடைய அதிக காலம் ஆகிறது என நினைக்கிறேன்” என்றார்.
நடப்பு ஆஸ்திரேலிய ஓபனில் சானியா மிர்சா, அமெரிக்காவின் ராஜீவ் ராமுடன் இணைந்து கலப்பு இரட்டையர் பிரிவில் விளையாடுகிறார். முதல் சுற்று நாளை நடக்கிறது.சானியா மிர்சா இதுவரை 6 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அவர் மகளிர் இரட்டையர் தரவரிசையின் உச்சநிலையை எட்டியுள்ளார். ஒற்றையர் தரவரிசையில் முதல் 30 இடங்களுக்குள் நுழைந்த முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். சானியாவின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.