• Sat. Apr 27th, 2024

மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து

Byp Kumar

Apr 19, 2023

இஸ்லாமியர்களின் புனித இரவான லைலத்துர் கத்ரு இரவையொட்டி மதுரையில் 2ஆயிரம் பேருக்கு பரிமாறப்பட்ட சமத்துவ சஹர் விருந்து.
இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ரமலான் மாதத்தில் பகல் நேரங்களில் உண்ணாமல், அருந்தாமல் இறைவனுக்காக நோன்பு நோற்கின்றனர். இந்த ரமலான் மாதம் முழுவதும் நோன்பினை கடைபிடிக்கும் இஸ்லாமியர்கள் அதிகாலையில் உணவு உட்கொண்டு மாலை வரை ரமலான் நோன்பு இருப்பார்கள்.
இந்நிலையில் ரமலான் மாதத்தின் 27நாள் இரவினை புனிதமிக்க குர்ஆன் அருளப்பட்ட இரவாக கருதி விடிய விடிய இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டனர்.


மதுரை மாவட்டத்தில் மகபூப்பாளையம், நெல்பேட்டை, ஹாஜிமார்தெரு, கலைநகர், ஆனையூர், வள்ளுவர் காலனி, கோரிப்பாளையம், சிலைமான், திருமங்கலம், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டி, மேலூர், உசிலம்பட்டி, சோழவந்தான், அலங்காநல்லூர், உள்ளிட்ட மாவட்ட முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிவாசல்களிலும் இரவு முழுவதும் தங்கிய இஸ்லாமியர்கள் அதிகாலைவரை சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு பின்னர் அடுத்தநாளுக்கான நோன்பினை கடைபிடித்தனர். இந்நிலையில் லைலத்துல் கத்ரு இரவை முன்னிட்டு மதுரை மகபூப்பாளையம் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் நோன்பை வைப்பதற்காக அதிகாலை 3மணிக்கு சஹர் உணவு பரிமாறப்பட்டது இதில் இஸ்லாமியர்கள் மட்டுமின்றி அனைத்து சமூகத்தினருக்கும் அழைப்புவிடுக்கப்பட்டு இரவில் சஹர் விருந்தாக 2ஆயிரம் பேருக்கு பிரியாணி அளிக்கப்பட்டது. உடனுக்குடன் சமைக்கப்பட்டு பிரியாணி வழங்கப்பட்டது.
இதில் மதுரை மாநகர் பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டு பிரியாணியை உட்கொண்டனர். இதனையடுத்து இஸ்லாமியர்கள் சிறப்புத்தொழுகையில் ஈடுபட்டனர்.
இஸ்லாமியர்களின் புனித மிக்க இரவான லைலத்துல் கத்ரு இரவில் அனைத்து சமூகத்தினருக்கும் வழங்கப்பட்ட சிலர் விருந்து அனைத்து தரப்பினரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *