• Tue. Sep 17th, 2024

தேசிய தர மதிப்பீட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் சாதனை..!

தேசிய தர மதிப்பீட்டில் A++ சான்றிதழ் பெற்று சேலம் பெரியார் பல்கலைக்கழகம் இந்திய அளவில் இரண்டாம் இடமும், தமிழக அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.


நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கல்லூரிகள் உள்ளிட்ட உயர்நிலைக் கல்வி நிறுவனங்களில் கல்வி ஆராய்ச்சி கட்டமைப்பு விரிவாக்கப் பணிகளை மதிப்பீடு செய்து தரவரிசை வழங்க தேசிய தர மதிப்பீட்டுக் மற்றும் நிர்ணய குழு செயல்பட்டு வருகிறது. இந்த குழு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நேரடியாக உயர் கல்வி நிறுவனம் மற்றும் பல்கலைக் கழகங்களை ஆய்வு செய்து தர மதிப்பீடு சான்றிதழ் வழங்குகிறது. அதன்படி கடந்த 22 ஆம் தேதி சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர்கள் ராஜாராமி ரெட்டி கொண்டிபால் தலைமையிலான குழுவினர் மூன்று நாட்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டனர்.


இந்த ஆய்வின் அடிப்படையில் பல்கலைக்கழகத்தில் பாடத்திட்ட வடிவமைப்பு கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீடு ஆராய்ச்சி புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கப் பணிகள் கட்டமைப்பு கற்றல் வள ஆதாரங்கள் மாணவர்கள் சேவை நிலை வளர்ச்சி நிர்வாகம் தலைமைத்துவம் மேலாண்மை நிறுவனத்தின் மதிப்பீடுகள் புதுமை கண்டுபிடிப்புகள் சிறப்பு நடைமுறைகள் ஆகிய ஏழு அடிப்படை கூறுகளை அளவுகோலாகக் கொண்டு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.


இந்த ஆய்வின் முடிவு நேற்று இணையதளத்தில் வெளியிடப்பட்டது அதன்படி சேலம் பெரியார் பல்கலைக் கழகம் 3.61 புள்ளிகளைப் பெற்று தமிழகத்தில்
A++ தரச்சான்று பெற்று முதல் மாநில பல்கலைக்கழகமாக தேர்வாகியுள்ளது. மேலும் அகில இந்திய அளவில் மாநில பல்கலைக் கழகங்களில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

மொத்தம் 4 புள்ளிகள் என்ற அடிப்படையில் பாடத்திட்டங்கள் வடிவமைப்பில் 3.6 புள்ளிகளையும் கற்றல் கற்பித்தல் மற்றும் மதிப்பீட்டில் 3.76 புள்ளிகளையும் ஆராய்ச்சி புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் விரிவாக்கப் பணிகளில் 3.72 புள்ளிகளையும் கட்டமைப்பு மற்றும் கற்றல் வள ஆதாரங்கள் 3.7 புள்ளிகளையும் நிர்வாகம் தலைமைத்துவம் மேலாண்மையில் 3.33 புள்ளிகளும் மதிப்பீடுகள் சிறப்பு நடைமுறைகளில் 3.96 புள்ளிகளும் என ஒட்டுமொத்தமாக 3.61 புள்ளிகளைப் பெற்று பெரியார் பல்கலைக்கழகம் A++ தர நிலையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *