எழுத்தாளர் தேவி பாரதிக்கு, ‘நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக, மத்திய அரசின் இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கஸ்பாபேட்டையை சேர்ந்த எழுத்தாளர் தேவி பாரதியின் இயற்பெயர் ராஜசேகரன். இவர் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக பல நூல்களை எழுதி உள்ளார். நிழலின் தனிமை, அற்ற குளத்து அற்புத மீன்கள், பிறகும் ஒரு இரவு, நொய்யல் உள்ளிட்ட நாவல்களையும் இவர் எழுதியுள்ளார்.
’கடந்த நாற்பதாண்டுகளாக எழுதிவரும் தேவிபாரதியின் ஒவ்வொரு படைப்பும் மானுட உணர்வின் பேராழத்தை விளக்க முயல்பவை. இவருடைய மூன்றாம் நாவலான நீர்வழிப் படூஉம், குடி நாசுவர் எனப்படும் சிறுகுடி மக்களின் வாழ்வுப்புலத்தில் ஒரு தனிமனிதனின் வாழ்க்கையின் வீழ்ச்சியை, அவனுடன் சமூகம் கொள்ளும் உறவைச் சித்தரிக்கிறது. எளிய மனிதர்களுக்கு நேரும் பிழைப்புத் துயரின் வேர்ப்புழுக்கத்தை கதைகளாகவும் நாவல்களாகவும் சித்தரித்த சமகாலத்தின் முதன்மைப் படைப்பாளிக்கு சாகித்ய விருது கிடைத்திருக்கிறது’ என்று வாசகர்கள் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், ’நீர்வழிப் படூஉம்’ நாவலுக்காக எழுத்தாளர் தேவி பாரதி சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், எழுத்தாளர் வண்ணதாசன் உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.