சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திரம், திருவிழாவிற்காக இன்று (ஏப்ரல் 1) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட உள்ளது.
கேரளா மாநிலம், சபரிமலையில் உள்ள பிரசித்தி பெற்ற ஐயப்பன் கோயிலில் மண்டல, மகர விளக்கு சீசன் தவிர ஒவ்வொரு தமிழ் மாதத்தின் முதல் ஐந்து நாட்கள் நடை திறக்கப்பட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். இதுதவிர பங்குனி உத்திரம் ஆராட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷூ பண்டிகைக்காக கோயில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா நாளை (ஏப்ரல் 2) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று (ஏப்ரல் 1) மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படுகிறது.
இதையடுத்து விழா நாட்களில் தினமும் வழக்கமான பூஜை வழிபாடுகளுடன், உத்சவ பலி சிறப்பு வழிபாடு நடைபெறும். ஏப்ரல் 10-ம் தேதி இரவு 9 மணிக்கு சரம் குத்தியில் பள்ளிவேட்டை நிகழ்ச்சி, ஏப்ரல் 11-ம் தேதி காலை 11 மணிக்கு பம்பை ஆற்றில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு திருவிழா கொடி இறக்கப்பட்டு ஏப்ரல் 11-ம் தேதி திருவிழா நிறைவு பெறுகிறது.
அதனைத் தொடர்ந்து சித்திரை மாத பூஜை மற்றும் விஷூ பண்டிகையை முன்னிட்டு ஏப்ரல் 18-ம் தேதி வரை சபரிமலையில் சிறப்பு பூஜை, வழிபாடுகள் தொடர்ந்து நடைபெறும். விஷூ பண்டிகை வருகிற 14-ம் தேதி கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலை 4 மணி முதல் 7 மணி வரை சிறப்பு பூஜை நடைபெறும். கடந்த மாத பூஜையின் போது பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு நேரடியாக அனுமதிக்கப்பட்டனர். அதே நடைமுறை இப்போதும் பின்பற்றப்படும். ஆனால், கூட்டம் அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் பெண்கள், குழந்தைகள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் நேரடியாகவும், மற்றவர்கள் மேல் நடைபாலம் வழியாகவும் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், இன்று (ஏப்ரல் 1) துவங்கி ஏப்ரல் 19-ம் தேதி வரை தொடர்ந்து நடை திறந்திருக்கும். இதற்காக தரிசன முன்பதிவு துவங்கியுள்ளது. பக்தர்கள், sabarimala.org.in என்ற அதிகாரபூர்வ இணைய தளத்தில் முன்பதிவு செய்யலாம் என திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.