• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறப்பு

ByA.Tamilselvan

Apr 11, 2023

சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.
15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது.
கேரளாவில் சித்திரை விஷு முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். இந்த வருட சித்திரை விஷு பண்டிகை வரும் 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சபரிமலை கோயில் நடை இன்று திறக்கப்பட்டது.
இன்று மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபாராதனை நடத்துவார். இன்று வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது. நாளை அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை உள்பட வழக்கமான பூஜைகள் நடக்கிறது.
அதைத்தொடர்ந்து அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை உள்பட சிறப்பு பூஜைகளும் நடைபெறும். காலை 5.30 முதல் 9 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். வரும் 15ம் தேதி விஷுக்கனி தரிசனம் நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும். காலை 7.30 மணி வரை பக்தர்கள் விஷுக்கனி தரிசனம் செய்யலாம்.
இந்த சமயத்தில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் விஷு கை நீட்டமாக நாணயங்களை வழங்குவார்கள். ஏப்ரல் 19ம் தேதி வரை சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்பட்டு சித்திரை விஷு சிறப்பு பூஜைகள் நிறைவடையும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு மட்டுமே தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும்.
நிலக்கலில் உடனடி முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருந்து சபரிமலைக்கு இன்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.