தூத்துக்குடியில் அரசு சுற்றுலா மாளிகை காவலாளியை தாக்கியதாக திமுக பிரமுகர் உட்பட 6 பேர் மீது வழக்கு செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி தெற்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு சுற்றுலா மாளிகை உள்ளது. இங்கு 29 வயதான சதாம் சேட் என்பவர் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், நேற்று மாலை 6.30 மணியளவில் அங்கு காரில் வந்த தூத்துக்குடி சின்னகடை தெருவைச் சேர்ந்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், விஜய் ரசிகர் மன்ற தலைவருமாக உள்ள ஜெகன் என்ற பில்லா ஜெகன்(44) மற்றும் அவருடன் வந்த 5 பேர் மது அருந்த அறை கேட்டுள்ளனர். அதற்கு காவலாளி சதாம் சேட், இது நீதிமன்றத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள வளாகம் இதில் நீதிபதிக்கு மட்டுமே அறை ஒதுக்கப்படும், எனவே அறை தர முடியாது என்று கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 6 பேரும் காவலாளி சதாம் சேட்டை அடித்து, கல்லால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், காயமடைந்த சதாம் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பில்லா ஜெகன் உட்பட 6 பேர் மீது 147, 148, 452, 294 பி, 332, 324, 506(।।), 510 ஆகிய பிரிவுகளின் கீழ் (PS cr no ; 796 / 2021) தென்பாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
“சுபாஷ் பண்ணையார் ஆதரவாளார்களால் தனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி அளித்த புகாரின் அடிப்படையில், பில்லா ஜெகனுக்கு போலீஸ் பாதுகாப்பு வழக்கப்பட்டு வருகிறது. சம்பவ நடைபெற்றபோது அவரது பாதுகாப்பிற்காக வந்த துப்பாக்கி ஏந்திய காவலரும் உடன் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிகழ்வுகள் தொடர் கதையாகி வருகிறது. இதற்கு முன்னரும், கடந்த அக்டோபர் 18ஆம் தேதியும் இதே போல் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. அப்போது, அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு தமிழக அரசு வழங்கிய காரை அவரது உதவியாளர் கிருபாகரன் திருச்செந்தூரில் உள்ள தனியார் லாட்ஜ்க்கு அவரது ஓட்டுநர் மூலம் எடுத்து வந்துள்ளார். காரை லாட்ஜிற்கு வெளியே நடுரோட்டில் நிறுத்திவிட்டு சென்றதால், போக்குவரத்து காவலர் முத்துக்குமார் என்பவர் ஓட்டுநரிடம் காரை ஓரமாக நிறுத்த சொல்லியுள்ளார். ஓட்டுநரும் அவ்வாறே செய்ய, வெளியே வந்த கிருபாகரன் கார் தள்ளி நிற்பதை பார்த்தவுடன் ஓட்டுநரிடம் கேட்டவர், காவலர் முத்துக்குமார் தான் தள்ளி நிறுத்த சொன்னார் என கூறியுள்ளார். உடனே ஆத்திரம் கொண்ட கிருபாகரன் முத்துக்குமாரிடம், எங்க ஆட்சி நடக்கும் போது என்னோட காரை எப்படி நீ ஓரமாய் நிறுத்த சொல்வாய் என்று தகாத வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறை ஒன்றையும் கொடுத்துள்ளார்.
இந்த நிகழ்வால், போக்குவரத்து போலீசார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த்துள்ளார். சிறிது நேரத்தில் அமைச்சர் அனிதா R.ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் காவலர் முத்துக்குமாரை சந்தித்து அமைச்சர் பேசுவதாக கூறி செல்போனை கொடுத்துள்ளார். அமைச்சர் காவலரிடம் கிருபாகரனை உன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறேன் என்று கூறியுள்ளார். மன்னிப்பு கேட்டால் அடிபட்ட அவமானம் சரியாகி விடுமா? அந்த இடத்தில் எப்படி வேலை பார்ப்பது பொதுமக்கள் மதிப்பார்களா? என போலீசார் கூற, உன்னிடம் எப்படி பேசவேண்டும் என்று எனக்கு தெரியும் என்று சொல்லி செல்போனை துண்டித்துள்ளார்.
சிறிது நேரத்தில் காவலர் முத்துக்குமாருக்கு மேலிடத்தில் இருந்து போன் வந்துள்ளது. வேலை, குடும்பம், குட்டி என்ற பயத்தில் கொடுத்த புகாரை வாபஸ் பெற்றுவிட்டார்.
அன்று முத்துக்குமார் கொடுத்த வழக்கை வாபஸ் வாங்கிவிட்டார். இன்று சதாம் சேட் புகார் கொடுத்துள்ளார். ஆனால் சதாம் சேட் எப்போது வேண்டுமானலும் வாபஸ் வாங்கலாம். ஆளும் கட்சி, எதிர் கட்சி என யாராக இருந்தாலும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வது மட்டுமின்றி, அரசு ஊழியர்களை தங்களது கடைமையை செய்யவிடாமல் தடுப்பவர்கள் மீது உரிய நடடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைவரின் கருத்து.