சேலம் மாவட்டம் வாழப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி முன்புறம் சுமார் 80-க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் செயல்பட்டு வந்தனர். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த கடைகளில் பழங்கள், பூ, கரும்புச்சாறு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த மாதம் 29ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழப்பாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஸ்டாலின் வருகைக்காக அப்பகுதியில் இருந்த சுமார் 80க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அகற்றப்பட்டன.
முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்ச்சி முடிந்த பின்னர் கடைகளை திறக்க முயன்றபோது நெடுஞ்சாலைத் துறையினர், அந்த கடைகளை திறக்க அனுமதி மறுத்தனர். மேலும், அவர்கள் காவல் துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களை சந்தித்தும் எந்த பலனும் இல்லை. இந்தநிலையில், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட வியாபாரிகள், மீண்டும் கடைகளை அமைக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் வருகையால் அன்று முதல் தற்போது வரை தாங்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்து வீதிக்கு வந்துவிட்டதாக வேதனை தெரிவித்தனர். தினமும் நகராட்சி நிர்வாகத்திற்கு வரி செலுத்தி வந்த நிலையில் தற்போது கடைகளை திறக்க காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை ஆகியோர் அலைகழித்து வந்த நிலையில் தற்போது ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்துள்ளோம் என்றும், கடைகள் அமைப்பதற்கு மாவட்ட ஆட்சியரும் அனுமதி மறுத்தால் இனி தற்கொலை செய்துகொள்வதை தவிர வேறு வழியில்லை என்று கண்ணீர்மல்க தெரிவித்தனர்.