• Wed. Mar 19th, 2025

சாலை விரிவாக்கப் பணி.., அவதிக் குள்ளாகும் பள்ளி மாணவ, மாணவிகள்..!

Byவிஷா

Jun 17, 2023

திருக்கழுக்குன்றம் அருகே கொத்திமங்கலத்தில் சாலை விரிவாக்கப் பணிகள் தொடங்கிய நிலையிலேயே முடங்கியுள்ளதால், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அருகில், கொத்திமங்கலம் ஊராட்சி பகுதி உள்ளது. திருக்கழுக்குன்றம் – மாமல்லபுரம் இடையிலான பட்டிக்காடு வழி சாலை, இப்பகுதி வழியே கடக்கிறது. தற்போதைய போக்குவரத்து பெருக்கத்திற்கு ஏற்ப இந்த சாலை விரிவுபடுத்தப்படாமல் இருந்தது. குறுகிய நிலையில் இருந்த சாலையால், அடிக்கடி வாகன நெரிசல் ஏற்பட்டு வந்தது. அதனால், சாலையை இருபுறமும் அகலப்படுத்த, நெடுஞ்சாலைத் துறை முடிவெடுத்தது. அதன் பின், இரண்டு மாதங்களுக்கு முன், இருபுறமும் பள்ளம் தோண்டி, ஜல்லிக்கற்கள் நிரப்பும் பணிகள் துவங்கின. ஆனால், சாலை விரிவாக்கப்பணி, துவங்கிய நிலையிலேயே முடங்கியுள்ளது. பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், தற்போது வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது. எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விட்டு ஒதுங்கக்கூட இடமில்லை. சாலையோரத்தில் அபாயமான பள்ளமாகவும் உள்ளன. எனவே, சாலை விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க, சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் வலியுறுத்துகின்றனர்.