இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 3ம் தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடக்கிறது.
இலங்கைக்கு எதிரான தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இதில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாகவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். அத்துடன் ஐ.பி.எல். ஏலத்தில் கோடிகளில் விலை போன இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் ஷிவம் மாவி, முகேஷ்குமார் ஆகியோர் புதுமுக வீரர்களாக அழைக்கப்பட்டு உள்ளனர். விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ஆடும் இந்திய அணியை ரோகித் சர்மா வழிநடத்துகிறார். வங்காளதேச தொடரில் மோசமாக ஆடிய 37 வயதான ஷிகர் தவான் கழற்றிவிடப்பட்டுள்ளார்.
இதில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இரு அணியிலும் ரிஷப் பண்ட் அணியில் இடன் பெறவில்லை. இது குறித்து கிரிக்கெட் விமர்சகர் ஹர்ஷா போக்ளே தனது டுவிட்டரில் பதிவிட்டிருப்பதாவது, எனவே, டி20யில் இடம் பிடிப்பதற்கான வரிசையில் இப்போது ரிஷப் பந்தை விட இஷான் கிஷன் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் முன்னிலையில் உள்ளனர். அது ஏற்கனவே அட்டைகளில் இருந்தது தான். இஷான், ருதுராஜ், சாம்சன் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அற்புதமான டாப் 4. ரஜத் படிதார் கடைசி பேட்டிங் இடத்திற்கு ஹூடா மற்றும் திரிபாதியுடன் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கலாம். இந்த டி20 அணி எப்படி செல்கிறது என்பதைப் பார்க்க மிகவும் உற்சாகமாக உள்ளது. இது மிகவும் உற்சாகமான அணி மற்றும் 2024 அணியின் மையமாக இருக்கலாம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.