ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரின் ஜலோரி கேட் பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட தியாகியின் சிலையில் கொடியை ஏற்றி அகற்றியதில் இரு சமூகத்தினருக்கு இடையே திங்கள்கிழமை இரவு ஏற்பட்ட மோதல் கல் வீச்சாக மாறியது.
இதில் சில காவலர்கள் காயமடைந்தனர். செவ்வாய்க்கிழமை காலை பிரார்த்தனைக்குப் பிறகு மீண்டும் அப்பகுதியில் மோதல் வெடித்தது.
நிலைமையை ஆராய முதல்வர் அசோக் கெலாட் தலைமையில் செவ்வாய்க்கிழமை ஒரு கூட்டம் நடைபெற்றது, இதைத் தொடர்ந்து ஜோத்பூரில் உள்ள 10 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கூடுதல் தலைமைச் செயலாளர் (உள்துறை), சட்டம் மற்றும் ஒழுங்கு ஏடிஜிபி மற்றும் உள்துறை இணை அமைச்சர் ராஜேந்திர சிங் யாதவ் உள்ளிட்ட ராஜஸ்தான் அரசின் மூத்த அதிகாரிகளை முதல்வர் அசோக் கெலாட் ஹெலிகாப்டர் மூலம் ஜோத்பூருக்கு அனுப்பினார்.
திங்கட்கிழமை இரவு, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் லத்தி சார்ஜ் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஜோத்பூரில் இணையதள சேவையும் நிறுத்தப்பட்டது.
தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது என்று சர்தார்புரா காவல் நிலையத்தின் ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி (SHO) தினேஷ் லகாவத் தெரிவித்தார்.
காவல்துறையின் கூற்றுப்படி, ஈத் தினமான அதே நாளில் பரசுராமர் ஜெயந்தியின் போது வைக்கப்பட்ட சில கொடிகள் தொடர்பாக திங்கள்கிழமை இரவு முதல் மோதல் தொடங்கியது. ‘நமாஸ் செய்யும் பகுதிக்கு அருகில் பரசுராமரின் கொடிகள் இருந்தன. ஈத் பண்டிகையையொட்டி உள்ளூர் முஸ்லிம் சமூகத்தினர் கொடி ஏற்றுவதற்காக, அந்தக் கொடிகளை அகற்றியதால் மோதல் ஏற்பட்டது’ என்று கூடுதல் டைரக்டர் ஜெனரல் (சட்டம் மற்றும் ஒழுங்கு) ஹவா சிங் குமாரியா கூறினார்.
மேலும், ‘ஈத்காவை ஒட்டிய பகுதி என்பதாலும், பெருநாள் தினத்தன்று அப்பகுதியில் ஏராளமானோர் தொழுகை நடத்த வாய்ப்புள்ளதாலும், போலீஸ் கமிஷனர் தலையிட்டு, கூட்டத்தை அந்த இடத்திற்கு அருகில் வர விடவில்லை. ‘ஆனால் கலைந்து செல்லும் போது, பதற்றம் அதிகரித்தது மற்றும் கல் வீசப்பட்டது,’ என்றும் குமாரியா கூறினார்.
‘ஜோத்பூரின் ஜலோரி கேட்டில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலின் விளைவாக ஏற்பட்ட பதற்றம் துரதிர்ஷ்டவசமானது. என்ன விலை கொடுத்தாலும் அமைதியையும் ஒழுங்கையும் நிலைநாட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தியுள்ளேன். மார்வாரில் உள்ள ஜோத்பூரில் உள்ள அன்பு மற்றும் சகோதரத்துவத்தின் பாரம்பரியத்தை மதித்து, அமைதி மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவுமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொள்கிறேன்’ என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செவ்வாய்க்கிழமை காலை ட்வீட் செய்துள்ளார்.
ஜோத்பூர் முதல்வரின் சொந்த மாவட்டம் மற்றும் சர்தார்புரா – ஜலோரி கேட் பகுதி சர்தார்புரா காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது. இது அவரது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. தனது பிறந்தநாளையொட்டி அவரது இல்லத்தில் நலம் விரும்பிகளை சந்திக்கவிருந்த அசோக் கெலாட், இந்தச் சம்பவம் குறித்த அவசரக் கூட்டத்திற்குத் தலைமை தாங்க அனைத்து நிகழ்ச்சிகளையும் இடைநிறுத்தினார்.
‘சுதந்திரப் போராட்ட வீரர் பால்முகுந்த் பிஸ்ஸாவின் சிலையின் மீது இஸ்லாமியக் கொடியை ஏற்றியதும், பரசுராமர் ஜெயந்தியை முன்னிட்டு வைக்கப்பட்டிருந்த காவி கொடியை அநாகரீகவாதிகள் அகற்றியதும் கண்டிக்கத்தக்கது. அனைவரும் அமைதி காக்க வேண்டும் என்பதே எனது வேண்டுகோள். கட்டுக்கடங்காத சக்திகளுக்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டும் என்பதே மாநில அரசுக்கு எனது கோரிக்கை’ என்று மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா செவ்வாய்க்கிழமை ட்வீட் செய்துள்ளார்.
‘நடந்தது நல்லதல்ல. இதுவரை ஜோத்பூரில் அமைதி நிலவியது. சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும்,’ என, சூர்சாகர் பா.ஜ., எம்.எல்.ஏ., சூர்யகாந்த வியாஸ் கூறினார்.