• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்

ByA.Tamilselvan

Sep 11, 2022

ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்.
ஓபிஎஸ் தனது அறிக்கையில்… மின்சாரத்தைப் பொறுத்தவரையில், மாதம் ஒருமுறை மின் பயன் அளவீடு, கைத்தறி நெசவாளர்களுக்கு 300 யூனிட் வரை இலவச மின்சாரம், விசைத்தறிக்கு 1000 யூனிட் வரை இலவச மின்சாரம் போன்ற பல வாக்குறுதிகளை தேர்தல் சமயத்தில் அள்ளி வீசிய கட்சி தி.மு.க. இந்தப் போலி வாக்குறுதிகள் மூலம் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., இந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், மின் கட்டண உயர்வின்மூலம் மட்டும் தாங்கிக் கொள்ள முடியாத கூடுதல் சுமையை தற்போது மக்கள் மீது சுமத்தியுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது.
மின் கட்டணத்தை உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டபோதே, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தை நான் தெரிவித்ததோடு, இந்த முடிவை கைவிட வேண்டுமென்று வலியுறுத்தினேன். பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டோரின் கருத்துகளை எல்லாம் புறந்தள்ளிவிட்டு, இன்று முதல் மின் கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாகவும், 100 யூனிட் இலவச மின்சாரம் வேண்டாமென்று நினைப்பவர்கள் அதனை விட்டுக் கொடுக்கலாம் என்றும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருப்பது தமிழ்நாடு முழுவதும் பேரதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
இது தவிர, 2026 ஆம் ஆண்டு வரை ஆண்டுக்கு தலா ஆறு விழுக்காடு மின்கட்டணங்களை உயர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த மக்கள் விரோதப் போக்கிற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏழை, எளிய மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.