தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பாஜக பழிவாங்கத் துடிக்கிறது என்று தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “தொகுதி மறுசீரமைப்பு மூலம் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை மட்டுப்படுத்த பாஜக விரும்புகிறது. இந்த நடவடிக்கையின் மூலம் வட மாநிலங்களுக்கு அதிக பலன் கிட்டும். இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை நடத்த வேண்டும். மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவுக்கு தென் மாநிலங்களில் பிரதிநிதித்துவம் என்பது இல்லை. அதனால், தொகுதி மறுசீரமைப்பு என்ற அஸ்திரத்தின் மூலம் தென் மாநிலங்களை பழிவாங்கத் துடிக்கிறது. இந்த நடவடிக்கையின் மூலம் வட மாநிலங்களுக்கு அதிக பலன் கிட்டும்.
மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது மத்திய அரசின் திட்டம். அதைத்தான் தென் மாநிலங்கள் செயல்படுத்தின. வேண்டுமானால் 30 ஆண்டுகளுக்கு தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை மத்திய அரசு நிறுத்தி வைத்தால், தென் மாநிலங்களின் மக்கள் தொகை வளர்ச்சி என்ன என்பதை பார்க்க முடியும். இந்த மறுசீரமைப்பு நடவடிக்கையை பொறுத்தவரையில், விகிதாச்சார அடிப்படையில் மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க வேண்டும்” என்றார்.






