தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப் பேரவையில் கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி தனித்தீர்மானத்தை இன்று கொண்டு வருகிறார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று கூடிய பேரவையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட் ஒதுக்கீடுகள் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவான விவாதம் நடைபெற்றது.
இந்த நிலையில் கச்சத்தீவை இலங்கையிடமிருந்து திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொண்டு வருகிறார்.
தமிழக மீனவர்களின் நலன் மற்றும் கச்சத்தீவு விவகாரத்தில் நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வரும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு அந்த தீர்மானம் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த 1974-ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் கச்சத்தீவை மீட்க வலியுறுத்தி நான்காவது முறையாக இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. இலங்கைக்கு ஏப்ரல் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் கச்சத்தீவு மீட்கக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.