புதுக்கோட்டை முதன்மைக்கல்வி அலுவலக வளாகத் தேர்வுக்கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை யாசிரியர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வந்திருந்த அனைவரையும் முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் வரவேற்றார். கூட்டத்திற்கு பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் தலைமை தாங்கி புதுக்கோட்டை மாவட்டத்தில் மாநில அளவில் கலையரசி பட்டம் பெற்ற 3 மாணவிகள், மன்றச் செயல்பாடுகளில் மாநில அளவில் தேர்வு பெற்று மலேசியா கல்விச் சுற்றுலா செல்ல தேர்வாகியுள்ள 9 மாணவர்கள், கலைத்திருவிழாவில் மாநில அளவில் முதல், இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்கள், மாநில, தேசிய அளவில் விளையாட்டு போட்டிகளில் சாதனை புரிந்த மாணவர்கள், தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டுகளைத் தெரிவித்து பேசும்போது கூறியதாவது, தலைமையாசிரியர்களாகிய நீங்கள் மற்றும் உங்களுடன் பணிபுரியும் ஆசிரியர்கள் ஆகியோர் பள்ளி அமைந்திருக்ககூடிய கிராமத்திற்கு பள்ளிக்கல்வித்துறையின் பிரதிநிதிகள்.

பெற்றோர்கள் , சமூகம் என்ன எதிர்பார்க்கிறார்களோ அதனை நிறைவேற்றும் வகையில் மாணவர்களுக்கு என்ன தேவையோ அதனை நிறைவேற்றுபர்களாக பள்ளியில் சிறப்பான சூழ்நிலையினை ஏற்படுத்தி ஒவ்வொரு வகுப்பறையினையும் ஒரு புதிய வகுப்பறையாக இருக்கும் வகையில் தலைமையாசிர்களும், ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து வடிவமைக்கவேண்டும். மாணவர்களிடம் பல்வேறு திறமைகள் உள்ளது. ஒவ்வொரு மாணவரின் தனித்திறமையினையும் கண்டறிந்து மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் ஆக்கமும், ஊக்கமும் அளிக்கவேண்டும்.
வகுப்பறையானது மாணவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியதாகவும், மாணவர்களின் வினாக்களுக்கு மதிப்பளிக்கக்கூடிய வகையிலும் அமையவேண்டும். மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு குறைந்த பட்சம் எழுதுவது, வாசிப்பது உள்ளிட்ட அடிப்படை திறன்களை தெரிய வைப்பதில் தலைமை யாசிரியர்களும், ஆசிரியர்களும் தனிக்கவனம் செலுத்தவேண்டும். தொடர்ந்து கற்றுக் கொண்டிருக்கும் ஆசிரியரால் மட்டுமே வகுப்பறையில் கற்பித்தலை சிறப்பாக செய்ய முடியும் என்பதைக்கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் முன் தயாரிப்புடன் சென்று பாடம் கற்பிக்கவேண்டும்.

ஆய்வகத்தினையும், கற்பித்தல் உபகரணங்களையும் பயன்படுத்தி ஆசிரியர்கள் கற்பித்தல் செய்வதையும், மாணவர்களின் கற்றலையும் தலைமையாசிரியர்கள் உற்றுநோக்கவேண்டும். மாணவர்களுக்கு பல வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக பள்ளியினை மாற்றவேண்டும். சிறப்பான செயல்பாடுகள் மூலமாக உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையினை அதிகப்படுத்திட வேண்டும். தலைமையாசிரியர்கள் வீட்டில் இருப்பதைவிட பள்ளியில் அதிக நேரம் இருப்பதைக் கருத்தில் கொண்டு பள்ளியின் வளர்ச்சியினை மேம்படுத்துபவராக தலைமை யாசிரியர்கள் செயல்படவேண்டும்.
9-ஆம் தேதி முதல் துவங்கும் மேல்நிலை செய்முறைத்தேர்விற்கும், அதனைத்தொடர்ந்து வரும் அரசுப்பொதுத்தேர்வுகளுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும், தேர்வுத்துறைக்கும் போதிய ஒத்துழைப்பினை நல்கி தேர்வுகளை சிறப்பாக நடத்திடவேண்டும். புதுக்கோட்டை மாவட்டம் பினதங்கிய நிலையில் இருந்து பல்வேறு செயல்பாடுகளில் முன்னேறியுள்ளமைக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக்கூட்டத்தில் மாவட்டக்கல்வி அலுவலர்கள் முனைவர் ஆரோக்கியராஜ், ரவிச்சந்திரன், கலாராணி, கனகராணி, பழனிவேல், அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் தமிழரசன், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் வெள்ளைச்சாமி, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தங்கராஜ், மாவட்ட சுற்றுசூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி,குருமாரிமுத்து, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள்( பொ) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
நிறைவாக புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர் முனைவர் ஆரோக்கியராஜ் நன்றி கூறினார். முன்னதாக புதுக்கோட்டை வந்த பள்ளிக்கல்வி இயக்குநரை முதன்மைக்கல்வி அலுவலர் கூ. சண்முகம் மற்றும் முன்னாள் முதன்மைக்கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, தலைமையாசிரியர்கள் மற்றும் பலர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.










