தொடர் மழை காரணமாக பட்டு உற்பத்தி தோட்டங்கள் நீரில் மூழ்கி அழிவு நிலைக்கு சென்றுள்ளதால் பாதிக்கப்பட்ட பட்டு விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை மாநில தலைவர் சிவப்பிரகாசம் பேட்டி அளித்துள்ளார்.

தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறை ஊழியர் சங்கத்தின் மாநில பேரவை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. இந்த பேரவைக் கூட்டத்தில் பட்டு வளர்ச்சித்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் தகுதி பெற்ற இளநிலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், அதிதீவிர பருவமழையின் காரணமாக பட்டு விவசாயி தோட்டங்கள் நீரில் மூழ்கி அழுகிவிட்ட நிலையில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், ராணிப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு புதிய உதவி இயக்குனர் அலுவலகம் உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் தமிழ்நாடு பட்டு வளர்ச்சித் துறையின் மாநில தலைவர் செயலாளர் உள்ளிட்ட மாநில பிரதிநிதிகள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.