சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2017ல் சசிகலாவை அதிமுக பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கி பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிராக சசிகலா சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
தன்னை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது செல்லாது என்று அறிவிக்கக் கோரினார். ஆனால், சசிகலாவின் கோரிக்கையை நிராகரிக்கக் கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் சசிகலாவின் கோரிக்கையை நிராகரித்துள்ளது நீதிமன்றம். சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து அதிமுக நீக்கியது செல்லும் என சென்னை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மேலும் ’நீதிமன்றத்தின் மூலம் கைப்பற்றப்படுவது கட்சி அல்ல’ அதனை மக்கள் மன்றத்தின் மூலம் செய்ய வேண்டும் என சசிகலாவும் இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இதையடுத்து சசிகலா, உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.