• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

நோயாளிகளுக்குத் தரமான உணவை வெளியில் இருந்து வாங்கி வர ஏன் அனுமதிப்பதில்லை என உறவினர்கள் ஆவேசம்…,

BySeenu

Nov 27, 2026

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குள் (CMCH) நோயாளிகளுக்காக வெளியில் இருந்து உணவு எடுத்துச் சென்ற உறவினர்களைக் காவலாளி தடுத்து நிறுத்தியதால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை, அரசு மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களைப் பார்ப்பதற்காகவும், உணவு வழங்குவதற்காகவும் தினமும் நூற்றுக் கணக்கான உறவினர்கள் வந்து செல்கின்றனர்.

​இந்நிலையில், நோயாளிகளுக்கு வழங்குவதற்காக வெளியில் இருந்து உணவுப் பொருட்களை எடுத்துச் சென்ற உறவினர்களை, மருத்துவமனை நுழைவு வாயிலில் பணியில் இருந்த காவலாளி தடுத்து நிறுத்தி உள்ளார். மருத்துவமனைக்குள் வெளியில் இருந்து உணவு கொண்டு செல்லக் கூடாது எனக் காவலாளி கூறியதால், நோயாளிகளின் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ​இதை அடுத்து, காவலாளிக்கும் நோயாளிகளின் உறவினர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுத் தகராறாக மாறியது.

​”பிறகு எதற்கு உள்ளே கேண்டீன் நடத்துகிறீர்கள்?” – உறவினர்கள் சரமாரி கேள்வி:
வாக்குவாதத்தின் போது, “மருத்துவமனை நிர்வாகமே நோயாளிகளுக்கு உணவு வழங்கும்; எனவே வெளியில் இருந்து உணவு கொண்டு செல்ல அனுமதி இல்லை” எனக் காவலாளி பதிலளித்து உள்ளார்.
​
​”மருத்துவமனை தான் உணவு கொடுக்கும் என்றால், பிறகு எதற்கு மருத்துவமனை வளாகத்திற்கு உள்ளேயே தனியார் கேண்டீன் வைத்து நடத்துகிறீர்கள்?”
​”நாங்கள் எங்கள் நோயாளிகளுக்காகத் தரமான உணவை வெளியில் இருந்து வாங்கி வருவதற்கு ஏன் அனுமதிக்க மாட்டீர்கள்?” என அவர்கள் ஆவேசத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மருத்துவமனை வாயிலில் காவலாளியுடன் நோயாளிகளின் உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வைரலாகி வருகின்றன.

​ஏழை, எளிய நோயாளிகளின் நலன் கருதி, வீட்டில் இருந்தோ அல்லது வெளியில் இருந்தோ சத்தான, தரமான உணவை உறவினர்கள் எடுத்துச் செல்ல மருத்துவமனை நிர்வாகம் உரிய அனுமதி வழங்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து உள்ளனர்.