• Fri. Nov 27th, 2026
WhatsApp Image 2026-11-20 at 00.10.17 (2)
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் முதல் முறையாக பூஜைப் பொருட்களுக்கான பிரத்யேக கண்காட்சி..,

BySeenu

Nov 27, 2026

மதுரையில் பிரம்மாண்டமாகத் தொடங்கியது TISMA EXPO 2026
100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்பு – சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்களைச் சலுகை விலையில் வாங்கலாம்.

தமிழ்நாடு உடனடி சாம்பிராணி உற்பத்தியாளர்கள் சங்கம் (TISMA) சார்பில், சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்களுக்கான பிரம்மாண்ட வர்த்தகக் கண்காட்சியான ‘TISMA EXPO 2026’, மதுரை ஐ.டி.ஏ ஸ்கடர் ஆடிட்டோரியத்தில் (IDA Scudder Auditorium) இன்று (நவம்பர் 27) கோலாகலமாகத் தொடங்கியது.
நவம்பர் 27, 28 மற்றும் 29 ஆகிய மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியின் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது.

இதில் அகில இந்திய அகர்பத்தி உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் அம்பிகா ராமானுஜனேயுலு, அரணபணி அறக்கட்டளைத் தலைவர் பவானி சிவா ஏ. தியாகராஜன், தமிழறிஞரும் நடிகருமான கலைமாமணி டாக்டர் கு.ஞானசம்பந்தன், தமிழ்நாடு தொழில் வர்த்தகச் சங்கத் தலைவர் டாக்டர் என். ஜெகதீசன், மாடிசியா (MADTSSIA) தலைவர் வி. செந்தில்குமார், எம்.டி.சி.பி.எஸ்.ஏ (MDCPSA) தலைவர் ஏ.எஸ்.வி.ஏ. மாதவன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டு கண்காட்சியைத் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவிலேயே சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் தொழில்துறைக்கென பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முதல் பிரம்மாண்ட B2B கண்காட்சியாக இது அமைந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட உற்பத்தி நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளன. நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 5,000-க்கும் மேற்பட்ட மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள் மற்றும் வர்த்தகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தியாளர்கள் தங்களது தயாரிப்புகளைப் புதிய சந்தைகளுக்கு அறிமுகப்படுத்தவும், புதிய வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளவும் இக்கண்காட்சி சிறந்த தளமாக அமைந்துள்ளது.

அகர்பத்தி, ஊதுபத்தி, சூடம், கப் சாம்பிராணி, சாம்பிராணி ஸ்டெம், தூபக்கோன் உள்ளிட்ட பல்வேறு வகையான சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகளை ஒரே இடத்தில் பார்வையிடுவதுடன், பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான பொருட்களைச் சிறப்புச் சலுகை விலையிலும் நேரடியாக வாங்கிக் கொள்ளலாம். கண்காட்சிக்கு வருகை தரும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 மதிப்பிலான பூஜைப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படுவது கூடுதல் சிறப்பம்சமாகும்.

மேலும், சாம்பிராணி மற்றும் பூஜைப் பொருட்கள் விநியோகத் தொழிலில் புதிதாக ஈடுபட விரும்புவோர் உற்பத்தியாளர்களை நேரடியாகச் சந்தித்து வணிக வாய்ப்புகளை அறிந்து கொள்ளவும், குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்குவதற்கான வழிமுறைகளை ஆராயவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், இத்துறையின் தயாரிப்புகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் மற்றும் சர்வதேசச் சந்தை விரிவாக்கம் குறித்த தகவல்களையும் இக்கண்காட்சியில் பெற்றுக்கொள்ளலாம்.

வெளிமாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து மதுரைக்கு வருகை தரும் வர்த்தகர்கள் மற்றும் பார்வையாளர்களுக்காக மதுரையின் பாரம்பரிய உணவு வகைகளை அறிமுகப்படுத்தும் சிறப்பு உணவு அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன், தென் தமிழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிகத் தலங்களைப் பார்வையிடும் வகையில் தென் தமிழ்நாடு டிராவல்ஸ் சங்கத்துடன் இணைந்து ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மூன்று நாட்கள் நடைபெறும் இக்கண்காட்சியைப் பொதுமக்கள், தொழில் முனைவோர், வணிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அனைவரும் இலவசமாகப் பார்வையிடலாம் என கண்காட்சித் தலைவர் ஜே.கே. முத்து, TISMA சங்கத் தலைவர் டி.எஸ். ஜீயர்பாபு, செயலாளர் சி. செந்தில்குமார், பொருளாளர் எஸ். ராஜசௌந்தரம் மற்றும் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். மேலும் விவரங்களுக்கு 82204 49911 என்ற எண்ணிலோ அல்லது tisma.co.in என்ற இணையதளத்திலோ தொடர்பு கொள்ளலாம்.