• Fri. Jan 24th, 2025

விடுமுறை நாட்களிலும் ரேஷன் கடைகள் இயங்கும்!

ByIyamadurai

Jan 3, 2025

பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 9-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளதாகவும், விடுமுறை தினமான ஜனவரி 3 மற்றும் 10-ம் தேதிகளிலும் ரேஷன் கடைகள் இயங்கும் என்று கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது

பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்புடன் கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு வழங்கப்பட உள்ள இலவச வேட்டி சேலைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டு, அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்புடன் இவற்றையும் சேர்த்து வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. பச்சரிசி, சா்க்கரை ஆகியவற்றை தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் மூலம் கொள்முதல் செய்து, நியாய விலைக் கடைகளுக்கு நகா்வு செய்ய வேண்டும். பொங்கல் பரிசுத் தொகுப்பை குடும்ப அட்டைதாரா்களுக்கு விநியோகம் செய்ய வசதியாக, பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருள்கள் அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் சென்றடைவதை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளா்கள் உறுதி செய்ய வேண்டும்.பரிசுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கரும்பை கொள்முதல் செய்ய மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை வீடு வீடாக விநியோகிக்கும் பணி இன்று (ஜன. 3) முதல் தொடங்க உள்ளது. பொங்கல் பரிசுத் தொகுப்பு நியாய விலைக் கடைகளில் வரும் 9-ம் தேதி முதல் விநியோகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக, டோக்கன்கள் விநியோகிக்கும் பணியை நிறைவு செய்ய கூட்டுறவு மற்றும் உணவுத் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, விடுமுறை தினமான ஜனவரி 3-ம் தேதி மற்றும் 10-ம் தேதிகளிலும் நியாய விலைக்கடைகள் இயங்கும் என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.