இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் தேசிய கொடி வாங்காவிட்டால் ரேஷன் பொருள் தர மறுப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் 75வது சுதந்திர தினம் ஆகஸ்ட் 15 அன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக அனைத்து மாநிலங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அனைத்து மக்களும் 75வது சுதந்திர தின விழா அன்று தங்கள் வீடுகளில் தேசிய கொடி வைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.இந்நிலையில் அரியானா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடை ஒன்றில், தேசிய கொடி வாங்கினால்தான் ரேஷன் பொருட்கள் தருவோம் என கூறியதாக சமூக வலைதளங்களில் வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து மத்திய உணவு மற்றும் நுகர்வோர் துறை அமைச்சகம் வெளியிட்ட விளக்கத்தில் “நாடு முழுவதும் 80 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு மாதம்தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கபட்டு வருகின்றன. ஆனால் தேசிய கொடி விற்பனை தொடர்பாக ரேஷன் கடை ஊழியர்களுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. தேசிய கொடி வாங்க சொல்லி நுகர்வோரை கட்டாயப்படுத்தக்கூடாது” என்று தெரிவித்துள்ளது.