• Sat. Apr 20th, 2024

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி பேரணி

மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்கவும், மூடப்பட்டுள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்கவும் வலியுறுத்தி மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க உழவர் பேரணி மற்றும் கோரிக்கை விளக்க பொதுக்கூட்டம். 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்பு.

மயிலாடுதுறையில் காவிரி டெல்டா பாசன முன்னேற்ற சங்கம் சார்பில் கோரிக்கை முழக்க உழவர் பேரணி மற்றும் விளக்கக் கூட்டம் சங்கத் தலைவர் குருகோபிகணேசன் தலைமையில் நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெய்த கன மழையால் பாதிக்கப்பட்ட சம்பா, தாளடி பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் கடந்த 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு செய்து ஜீரோ சதவீதம் முதல் 10 சதவீதம் வரை அறிவிக்கப்பட்டுள்ள 74 கிராமங்களையும் மறுஆய்வு செய்து ஏக்கர் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.8000 தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க வேண்டும், பாரத பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தில் பாண்டிச்சேரி, தெலுங்கானா, சட்டீஸ்கர் மாநிலங்களில் விவசாயிகளுக்கு வழங்குவது போல் பின்னேற்பு மானியமாக ஏக்கர் ஒன்றுக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும்.

பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை மூலம் டெண்டர் பேக்கேஜ் முறையில் தூர்வாரும் பணிகளை செய்வதற்கு உண்மையான விவசாய குழுக்கள் ஏற்படுத்த வேண்டும், நெல்லுக்கு மாற்றுத் தொழிலாக விளங்கக்கூடிய கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மூடப்பட்டுள்ள தலைஞாயிறு என்.பி.கே.ஆர் சர்க்கரை ஆலையை போர்க்கால அடிப்படையில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அறுவடைக் காலம் துவங்குவதற்கு முன்பே அறுவடை இயந்திரங்கள் அதற்கான வாடகை கூலியை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேரணி நடைபெற்றது.

திருவாரூர் சாலை கேணிக்கடையில் துவங்கிய பேரணியானது சின்னக்கடை வீதியில் நிறைவடைந்தது. அங்கு கோரிக்கைகள் குறித்து விளக்கக் கூட்டம் நடைபெற்றது. அதில் ஏராளமான விவசாயிகள் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர். இதில், 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *