• Fri. Mar 29th, 2024

ராஜீவ்காந்தி கொலையாளிகள் விடுதலை: சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யவேண்டும்: நாராயணசாமி

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுதலை செய்யப்பட்டது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மறுசீராய்வுமனு தாக்கல் செய்யவேண்டும் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ராஜீவ்காந்தி படுகொலை தொடர்பான வழக்கில் 7 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு அதை சுப்ரீம் கோர்ட் ஆயுள்தண்டனையாக மாற்றி சிறைவாசம் அனுபவித்தார்கள். ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் மற்றும் 6 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார். நாட்டின் பிரதமராக இருந்த ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் நீதிமன்றம் மூலம் தண்டிக்கப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு அது மறுபடியும் ஆயுள் தண்டனையாக மாறியது. தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக கவர்னர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அதற்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காததால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டார்.
நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல், நாட்டின் பிரதமராக இருந்த ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற ஒருநிலையில் அதைப் பார்க்காமல் அவரை சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்தது. அதன் அடிப்படையில் நளினி உள்பட 6 பேர் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள். இது காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் வருத்தத்தையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. ஒரு நாட்டின் முன்னாள் பிரதமர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு வக்கீல் கலந்துகொள்ளாமல் மத்திய அரசின் நிலையை சொல்லாமல் இருப்பது மோடி அரசின் செயலற்ற தன்மையை காட்டுகிறது. தமிழகத்தில் பல அரசியல் கட்சிகள் இந்த விடுதலையை கொண்டாடுவது மேலும் வேதனையை தருகிறது. ஒரு அரசியல் கட்சியின் மாபெரும் தலைவர் படுகொலை செய்யப்பட்டதற்கு முழுமையான நீதி வழங்கியும் அதை நீதிமன்றம் என்ற போர்வையில் தட்டிப்பறிப்பது ஜனநாயகத்துக்கு உகந்ததல்ல.
மத்திய அரசு 6 பேரின் விடுதலை சம்பந்தமான மனுவில் தங்களுடைய எதிர்ப்பை தீவிரமாக காட்டி இருக்கவேண்டும். சில அரசியல் கட்சிகள் அடிக்கடி தங்களுடைய போக்கை மாற்றிக்கொள்ளும் போக்கு வேதனை தருகிறது. இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உடனடியாக சுப்ரீம் கோர்ட்டில் மறுசீராய்வு மனுதாக்கல் செய்யவேண்டும். காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் இருந்து சாதாரண தொண்டன் வரை இந்த தீர்ப்பை எதிர்க்கிறோம். சோனியாகாந்தி, ராகுல்காந்தி, பிரியங்காகாந்தி ஆகியோர் மன்னித்துவிட்டார்கள் என்று சிலர் பேசுகிறார்கள். இது அந்த தலைவர்களுடைய பெருந்தன்மையை காட்டுகிறது. ஆனால் ஒரு கட்சியின் தொண்டன் என்ற முறையிலே ராஜீவ்காந்தி படுகொலையை கண்டித்து முழுமையான நீதி கிடைக்கிறவரை நாங்கள் போராடுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *