• Wed. May 8th, 2024

10 சதவீத இட ஒதுக்கீடு: சுப்ரீம் கோர்ட்டு
தீர்ப்பை காங்கிரஸ் மறுஆய்வு செய்யும்:ப.சிதம்பரம்

10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்வதாக கூறியதற்கு மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு
தெரிவித்துள்ளார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் அரசியல் சட்ட திருத்தம் செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு வழங்கியுள்ள தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்றுள்ளது. ஆனால், திமுக, ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இதற்கு எதிர்ப்புகள் எழுந்துள்ளது. தென் மாநிலங்களை சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் இந்தத் தீர்ப்பை வரவேற்கவில்லை. இந்த நிலையில், எஸ்சி, எஸ்டி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை தவிர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்ய காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் சமூக மற்றும் அரசியல் தாக்கம் குறித்து ஆராய்வது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான அபிஷேக் சிங்வி சட்ட நுணுக்கங்களை ஆய்வு செய்யும் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், 10 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பை காங்கிரஸ் மறுபரிசீலனை செய்வதாக கூறியதற்கு மூத்த தலைவர் ப.சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை மறுஆய்வு செய்யும் என்ற காங்கிரஸ் கட்சியின் அறிக்கையை வரவேற்கிறேன். புதிய இடஒதுக்கீட்டில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருப்பது மக்களிடையே பரவலான கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், சின்ஹோ கமிஷனின் படி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மக்கள் தொகையில் 82 சதவீதம் பேர் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளனர். ஏழைகள் ஒரு வகுப்பை உருவாக்குகிறார்கள். 82 சதவீத ஏழைகளை சட்டத்தில் விலக்க முடியுமா? இது அக்கறையுடனும் ஆராயப்பட வேண்டிய கேள்வி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *