சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று காலை முதல் வானம் முழுவதும் கருமேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து, மதியத்துடன் மழை தீவிரமடைந்து, ஆலந்தூர், சென்னை விமான நிலையம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தற்போது கனமழை கொட்டி வருகிறது.

மழையால் சாலைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி மெதுவாக வாகனங்களை இயக்கி வருகின்றனர். சில பகுதிகளில் வாகன நெரிசலும் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, தாம்பரம் மற்றும் பல்லாவரம் மேற்கு பகுதிகளில் தாழ்வான சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக பள்ளி, அலுவலகம் செல்லும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். விமான நிலையம் அருகிலும் நீர் தேங்கியதால், வாகனங்கள் மந்தமாக நகர்கின்றன. இதேநேரம், வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்னும் சில மணி நேரங்களுக்கு இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மழை தீவிரமடைந்த நிலையில், மக்கள் வீட்டிலிருந்து வெளியே செல்லாமல் பாதுகாப்பாக இருக்குமாறு அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





