சென்னை – கோவை செல்லும் சதாப்தி ரயிலுக்குள் மழை நீர் உள்ளே விழுந்ததால், பயணிகள் அவதி அடைந்தனர்.
சென்னை சென்ட்ரல் – கோயம்புத்தூர் இடையே சதாப்தி விரைவுரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில் கோயம்புத்தூர் அருகே பீளமேடு பகுதியில் நேற்று சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை பெய்ததால், இந்தரயிலின் சி-7 பெட்டியில் மழைநீர் உள்ளே கசிந்து ஒழுகியது. இதனால், பயணிகள் அவதிப்பட்டனர். இது குறித்து, பயணிகள் வீடியோ எடுத்து, சமூக வலைத்தளத்தில் நேற்று வெளியிட்டனர்.
இது குறித்து, பயணிகள் கூறுகையில், ‘‘சதாப்தி ரயிலில் சாதாரண மழைக்கே மழைநீர் கசிந்து ஒழுகியது. அதுவும், மின்விளக்கு வழியாக மழைநீர் ஊற்றியதால், பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. பயணிகள் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.
இது குறித்து தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ‘‘பயணிகளின் கோரிக்கைகள் தொடர்பாக உரிய துறை அதிகாரிகளிடம் பேசிவருகிறோம். தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
ரயிலுக்குள் மழை: பயணிகள் அவதி
