உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகள் அங்கு படையெடுக்க தொடங்கியுள்ளன. வரும் 18ம் தேதி அமேதி தொகுதியில் ராகுல் காந்தி பாத யாத்திரை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே 14ம் தேதியுடன் நிறைவடைவதால் வரும் மார்ச் மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாரதிய ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் கவனம் அம்மாநிலத்தின் மீது குவிந்துள்ளது. ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், இழந்த தளத்தை மீட்டெடுக்க காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
உத்திரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்று வரும் நிலையில், வரும் 18ம் தேதி அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தலைமையில் பாத யாத்திரை நடத்தவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தியும் பங்கேற்க உள்ளதாக கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அரசின் பொருளாதார கொள்கைகளுக்கு எதிராக இந்த பாத யாத்திரை நடைபெறுவதாகவும் அக்கட்சி கூறியுள்ளது. இதையடுத்து உத்திரப்பிரதேச மாநில சட்டப்பேரவை களம் தீவிரமடையும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.