சென்னை அடுத்த பல்லாவரத்தில், இந்திய தேசிய லீக் கட்சி சார்பில் ‘ஆசாதி விடுதலை போராட்டம்’ மாநில துணைப் பொதுச்செயலாளர் ரஹமதுல்லா தலைமையில் நடைபெற்றது. பல்லாவரம் மசூதியில் இருந்து பேரணி தொடங்கி அம்பேத்கர் சிலை அருகே நிறைவு பெற்றது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் உபா சட்டத்தின் கீழ் நீண்டகாலமாக சிறைவாசம் அனுபவித்து வரும் குற்றமற்றவர்களுக்கு பிணை மறுக்கப்படுவது அநீதி எனக் கண்டித்து இந்தப் போராட்டம் நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி கோஷமிட்டனர்.
மஜக அப்துல் சமது, தமிழ் அறம் தலைவர் முத்துராஜ், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் தமீம் அன்சாரி, செங்கல்பட்டு தலைவர் வஸீம் மாலிக், செயலாளர் ஹம்சா, பொருளாளர் இதயதுல்லா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் உரையாற்றிய ரஹமதுல்லா, “எங்கள் குரலை அடக்க முடியாது. ஆர்.எஸ்.எஸ். இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்; பாஜக இல்லாத நாடாளுமன்றத்தை உருவாக்குவோம்,” என்று தீவிரமாக தெரிவித்தார்.
சிறைவாசம் அனுபவிக்கும் குற்றமற்றவர்களுக்கு உடனடி நீதி கிடைக்க வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.








