• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் மடியேந்தி வாக்கு கேட்ட ராதிகாசரத்குமார்

Byவிஷா

Apr 4, 2024

விருதுநகர் மக்களவைத் தொகுதியில், பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகாசரத்குமார் வாக்கு சேகரிப்பின் போது, பொதுமக்களிடம் மடியேந்தி வாக்கு கேட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு தேதி தமிழகத்தில் நெருங்கி கொண்டு இருக்கும் வேளையில், அரசியல் தலைவர்கள், வேட்பாளர்கள், நட்சத்திர பேச்சாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். விருதுநகர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் ராதிகா சரத்குமாரும் தனது கணவர் சரத்குமார் உடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
விருதுநகர் மாவட்டம், கப்பலூர் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் வாக்கு சேகரித்த ராதிகா சரத்குமார், வரும் ஏப்ரல் 19ஆம் தேதி அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். மேலும், நான் இப்போது நீங்கள் சொல்வதை செய்யும் இடத்தில் இருக்கிறேன். திமுகவிடம் பிரதமர் வேட்பாளரே கிடையாது. அதிமுகவிடம் மத்திய மாநில அரசுகளுடன் எந்த தொடர்பும் கிடையாது.
நீங்கள் என்ன சொல்கிறீர்களோ அதனை மாநில தலைவர் அண்ணாமலை மூலம் பிரதமரிடம் கூறி அதனை நிறைவேற்றுவேன். அதனால் தவறாமல் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார். அப்போது கூட்டத்தில் இருந்து ஒருவர் கிழக்கு சீமையிலே படத்தில் ராதிகா ஏற்று நடித்து இருந்த விருமாயி கதாபாத்திர வசனத்தை கூற கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்று பேச தொடங்கிய ராதிகா, அருகில் இருந்த கணவர் சரத்குமாரிடம், மாமா இந்த மைக்கை பிடியுங்கள் என கூறி, பின்னர் மடியேந்தி, நான் உங்களுக்காக அனைத்தையும் கொடுத்துவிட்டேன். இன்னும் என்னிடம் உயிர் மட்டும் தான் இருக்கிறது. அத்தனையும் உங்களுக்காக கொடுப்பேன் என கூறி வாக்கு சேகரித்தார் விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார்.