



இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வந்த நிலையில், அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லிக்கு திடீரென பயணமானார். அவருடன் அதிமுக எம்.பிக்கள், நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். டெல்லியில் பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். இதன் மூலம் வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணி ஏற்படும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், கூட்டணி குறித்து அமித்ஷாவுடன் பேசவில்லையென்றும், மக்கள் பிரச்சினைகளை மட்டுமே அவரிடம் தான் பேசியதாக எடப்பாடி பழனிசாமி சென்னை திரும்பிய பின்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று காலை திடீரென டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அங்கு அவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இந்தியாவின் இரும்பு மனிதர் அமித்ஷா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் புகழாரம் சூட்டியுள்ளார் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து அவர் காணொலியில் பேசியதாவது: இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லப்பாய் படேலின் மறு வடிவமாக பார்க்கப்படும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை இரண்டு மணிநேரத்துக்கு மேலாக தமிழகத்தின் இரும்பு மனிதர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசியிருப்பது பற்றி பல கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால், தமிழகத்தின் நலனுக்காக அவர் முன்வைத்துள்ள கோரிக்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்ல வேண்டும். இருமொழிக் கொள்கையைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பில் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்” என்று பேசியுள்ளார்.
பாஜகவுடன் கூட்டணி என்று அதிமுக அறிவிக்காத நிலையில், அந்த கட்சியின் முன்னாள் அமைச்சர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை புகழ்ந்து தள்ளியுள்ளது அக்கட்சி தலைமையின் கருத்தின் அடிப்படையில் தான் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி வழிகாட்டுதலின்படி தான், ஆர்.பி.உதயகுமார் அமித்ஷாவுக்கு புகழ்மாலை சூட்டியிருப்பார் என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

