• Fri. Nov 28th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சவுக்கு சங்கர் வீட்டில் நடந்தது அநாகரீகத்தின் உச்சம் – இரா.முத்தரசன் கண்டனம்!

ByP.Kavitha Kumar

Mar 25, 2025

யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில் நடந்த சம்பவம் அநாகரீகத்தின் உச்சம் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “யூடியூபர் சவுக்கு சங்கர் வீட்டில், அத்துமீறி நுழைந்து மனிதக் கழிவுகளையும், சாக்கடை கழிவுகளையும் வீடு முழுவதும் கொட்டிய செயல் அநாகரீகத்தின் உச்சமானது. நாகரீக சமூகம் எவ்வகையிலும் ஏற்கத்தக்க செயலல்ல. பொதுதளங்களில் ஒருவரது பேச்சு, அடுத்தவர்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்தால் அதன் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க உரிமை உண்டு. அதற்கான சட்டப் பாதுகாப்புகளும் இருக்கின்றன.

இந்த முறையான, சட்டரீதியான வாய்ப்புகளை நிராகரித்து விட்டு, சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வது சட்டம் – ஒழுங்கு நிர்வாகத்தை சீர்குலைக்கும் அராஜக செயலாகும். சவுக்கு சங்கரின் வீட்டில் நடந்த அராஜக செயலை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கண்டிக்கிறது.

இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல் தண்டிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

சவுக்கு சங்கர் வீட்டின் மீது கழிவு நீரை கொட்டி தாக்குதல் நடத்தப்பட்டதற்கு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விசிக தலைவர் தொல்.திருமாவளவன், தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.