



சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவரது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசியக் கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை என்பது, தமிழகம் முழுவதும் முதலமைச்சர் குடும்பம் உட்பட திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் வழங்கப்படும் பல மொழிகள் கற்கும் வாய்ப்பு, அரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதே தவிர, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறுவது போல இந்தித் திணிப்பு அல்ல. இந்தித் திணிப்பு நடப்பதே, திமுகவினர் நடத்தும் தனியார் பள்ளிகளில் தான்.

இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில், இந்தித் திணிப்பு என்று மீண்டும் கூறியிருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மும்மொழிக் கல்வியை இந்தித் திணிப்பு என்று திரித்துக் கூறுவதன் மூலம், பணமிருப்பவர்கள் மட்டும்தான் பல மொழிகள் கற்க வேண்டும் என்ற மறைமுகக் கொள்கையை, மீண்டும் உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இது தவிர, பள்ளிக் கல்வித்துறையின் மானியக் கோரிக்கையில், மொழி வளர்ச்சி என்ற தலைப்பின் கீழ், சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு, கடந்த 2024 – 25-ம் நிதியாண்டில் ரூ. 11 கோடி செலவிடப்பட்டுள்ளதாகவும், 2025 – 26-ம் நிதியாண்டிற்கு, ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கு கடந்த ஆண்டு ரூ.13 கோடி செலவு செய்துள்ளதாகவும், இந்த ஆண்டு ரூ.14 கோடி ஒதுக்கீடு செய்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
திமுக அரசு, சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கும், ஏனைய மொழிகள் வளர்ச்சிக்கும் என்ன செலவு செய்து கொண்டிருக்கிறது என்பது குறித்து, முதலமைச்சர் பொதுமக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

