• Thu. Mar 28th, 2024

R.K.செல்வமணிக்கு ஆப்படித்த தயாரிப்பாளர்கள் சங்கம்!…

Byகுமார்

Aug 7, 2021

பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவரான ஆர்.கே.செல்வமணிக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம்.

நடிகர் சிம்பு நடிப்பில் நேற்றைக்குத் துவங்கியிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பிற்கு பெப்சி அமைப்பு ஒத்துழைப்பு கொடுத்ததே இதற்குக் காரணமாம்.

நடிகர் சிம்பு மீது பல்வேறு தயாரிப்பாளர்கள் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார்கள்.

அன்பானவன் அடங்காவதன் அசராதவன் படத்திற்காக சிம்புவிடம் நஷ்ட ஈடு கேட்டுக் கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன். 6 வருடங்களுக்கு முன் கொடுத்த 1 கோடி ரூபாய் அட்வான்ஸை திருப்பிக் கொடுக்கும்படி கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ். இது நம்ம ஆளு படத்தின் வெளியிட்டீன்போது பண உதவி செய்த வகையில் 3.50 கோடி ரூபாயை தனக்குத் தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத் தலைவரான முரளி ராமசாமியே கேட்டிருக்கிறார்.

இத்தனை பிரச்சினைகளையும் தாண்டி சிம்பு தனது படங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த முறை அவருக்குக் கடிவாளம் போட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுவிடலாம் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சென்ற வாரமே சிம்புவின் புதிய படத்திற்கு பெப்சி தொழிலாளர்களை அனுப்பக் கூடாது என்று கடிதம் அனுப்பியது.

இதையொட்டி நடந்த பேச்சுவார்த்தையின்போதும் நேரில் வந்து கலந்து கொண்ட இயக்குநர் செல்வமணி தயாரிப்பாளர் சங்கம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத் தான் ஏற்றுக் கொள்வதாகச் சொல்லிவிட்டு வந்தார்.

ஆனால் இரண்டே நாளில் பல்டியடித்து சிம்புவின் புதிய பட ஷூட்டிங்கிற்கு பெப்சியின் மூலமாக ஓகே சொன்னார் செல்வமணி. இதனால் அதிர்ந்து போன தயாரிப்பாளர் சங்கத்தினர் செல்வமணியிடம் கேட்டதற்கு “ஷூட்டிங்கிற்கு பிளான் பண்ணிட்டாங்களாம். இப்போ நிறுத்தினால் தயாரிப்பாளருக்கு நிறைய நஷ்டம் வரும். ஒரு ஷெட்யூல் போகட்டும். அதன் பின்பு பேசித் தீர்ப்போம்..” என்று மென்மையாகப் பதில் சொன்னாராம்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சங்கத்தினர் நேற்று மாலை அவசர செயற்குழுக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறார்கள். இதில் “செல்வமணி பெப்சியின் தலைவர் பதவியில் இருக்கும்வரையிலும் அதற்கு எந்தவித ஒத்துழைப்பும் கொடுக்கப் போவதில்லை” என்று முடிவெடுத்திருக்கிறார்கள்.

திரையுலகத்தில் முதன்மையான சங்கமே தயாரிப்பாளர் சங்கம்தான். அவர்களில்லாமல் தொழிலாளர்கள் இல்லை. இப்போது அவர்களே தொழிலாளர் சங்கத்தின் தலைமைக்கு எதிராகத் திரும்பியிருப்பதால் தமிழ்சினிமாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *