நேற்று நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸிடம் 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில், பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோரின் அரைசதங்கள் அந்த அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தன. இதன் மூலம் இந்த சீசனில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாத முதல் அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மாறியது.
சென்னை அணி முதலில் பேட் செய்து 19.2 ஓவர்களில் 190 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பின்னர் 191 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பஞ்சாப் அணி 19.4 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 36 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்தது.

முதல் விக்கெட்டுக்கு பிரியான்ஷ் ஆர்யா மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் 28 பந்துகளில் 44 ரன்கள் சேர்த்தனர். பிரியான்ஷ் 15 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் – பிரப்சிம்ரன் சிங் ஜோடி இரண்டாவது விக்கெட்டுக்கு 50 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்தது. பிரப்சிம்ரன் சிங் 36 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ரன்கள் எடுப்பதற்குள் நேஹல் வதேரா (5) ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்ரேயாஸ் ஐயர் ஷஷாங்க் சிங்குடன் (23 ரன்கள்) இணைந்து கூட்டணி அமைத்தார்.
வெற்றிக்கு 3 ரன்கள் மட்டுமே தேவைப்பட்ட நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும், ஸ்கோர் சமநிலையில் இருந்தபோது சூர்யான்ஷ் ஷெட்ஜேவும் (1) ஆட்டமிழந்தனர். பரபரப்பான இறுதி நிமிடங்களுக்குப் பிறகு, 2 பந்துகள் மீதமிருக்கையில் மார்கோ யான்சன் (4) பஞ்சாப் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். ஜோஷ்(6) ஆட்டமிழக்காமல் இருந்தார். சென்னை அணி சார்பில் மதீஷா பத்திரனா மற்றும் கலீல் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், நூர் அகமது மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
முன்னதாக, சாம் கரன் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோரின் சிறப்பான பேட்டிங் காரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஒரு நல்ல ஸ்கோரை எட்டியது. ஒரு கட்டத்தில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்திருந்த சென்னை, அடுத்த 18 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 19வது ஓவரின் கடைசி மூன்று பந்துகளில் தீபக் ஹூடா, அன்ஷுல் காம்போஜ் மற்றும் நூர் அகமது ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்து யுஸ்வேந்திர சாஹல் ஹாட்ரிக் சாதனை படைத்தார். சாம் கரன் 47 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்து சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோரராக விளங்கினார்.
டெவால்ட் பிரேவிஸ் 26 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். ஷேக் ரஷீத் (11 ரன்கள்), ஆயுஷ் மாத்ரே (7), ரவீந்திர ஜடேஜா (17) ஆகியோர் ஆட்டமிழந்த பிறகு, 5.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 48 ரன்கள் என்ற நிலையில் தடுமாறிய சென்னையை, சாம் கரன் மற்றும் டெவால்ட் பிரேவிஸ் ஆகியோர் நான்காவது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்து மீட்டனர். பின்னர் சாம் கரன் ஷிவம் துபேவுடன் இணைந்து 22 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்தார். டெவால்ட் பிரேவிஸ் மற்றும் சாம் கரன் ஆட்டமிழந்த பிறகு வந்த வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை.
கேப்டன் மகேந்திர சிங் தோனி (11), ஷிவம் துபே (6), தீபக் ஹூடா (2), அன்ஷுல் காம்போஜ் (0), நூர் அகமது (0) ஆகியோர் ஆட்டமிழந்த மற்ற பேட்ஸ்மேன்கள். கலீல் அகமது ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழக்காமல் இருந்தார். பஞ்சாப் அணி சார்பில் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளையும், மார்கோ யான்சன் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், அஸ்மதுல்லா ஒமர்சாய் மற்றும் ஹர்ப்ரீத் பிரார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.