• Thu. Sep 17th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

இடையக்கோட்டை வழியாக இயக்கப்படும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதி..,

இடையக்கோட்டை வழியாக மாலை நேரத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் இருந்து மாலை 5:50 மணிக்கு புறப்பட்டு தாடிக்கொம்பு, சுக்காம்பட்டி, கெண்டையகவுண்டனூர், சாலையூர் நால்ரோடு வழியாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நவாலூற்று, கல்லுப்பட்டி பிரிவு, புல்லாகவுண்டனூர், இடையக்கோட்டை, நாரப்பநாயக்கனபட்டி, எல்லைப்பட்டி ஆகிய ஊரில் வழியாக மார்க்கம்பட்டிக்கு இரவு 7:50 மணிக்கு சென்று மீண்டும் அங்கிருந்து புறப்பட்டு வேடசந்தூர் வரும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் டவுன் பஸ் வேடசந்தூர் பணிமனையில் இருந்து இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக இடையக்கோட்டை வழியாக இரவு நேரத்தில் இயக்கப்படும் கடைசி அரசு டவுன் பஸ் திடீரென்று நிறுத்தப்பட்டதால் பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அன்றாட கூலித் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் திண்டுக்கல் மற்றும் வேடசந்தூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகம் பணம் வைத்துள்ளவர்கள் ஆட்டோ மற்றும் கார் வாடகைக்கு எடுத்து சொந்த ஊருக்கு திரும்புகின்றனர்.

ஆனால் ஏழை, எளிய மக்கள் திண்டுக்கல் மற்றும் வேடசந்தூர் பஸ் நிலையத்தில் விடிய விடிய காத்திருந்து காலையில் சொந்த ஊருக்கு திரும்ப வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பணிக்கு செல்லும் இளம் பெண்கள் வேறு வழியின்றி பாதுகாப்பின்றி பஸ் நிலையத்தில் விடிய விடிய காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

திடீரென்று மாலை நேரத்தில் இயக்கப்படும் அரசு டவுன் பஸ் நிறுத்தப்பட்டதால் 50 ஊர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறை உடனடியாக தலையிட்டு திண்டுக்கல்லில் இருந்து இடையக்கோட்டை வழியாக மார்க்கம்பட்டி வரை மாலை நேரத்தில் இயக்கப்படும் டவுன் பஸ்சை தொடர்ந்து இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.