விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதச்சார்பின்மை காப்போம் மாபெரும் மக்கள் எழுச்சி பேரணி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் புதுச்சேரி மாநில அரசியல் குழு செயலாளர் அரசு.வணங்காமுடி தலைமையில் காரைக்கால் கடற்கரை சாலையில் நடைபெற்றது.

இதில் முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன், அரசியல் குழு மாநில துணைச் செயலாளர் பொன்.செந்தமிழ் செல்வன் முன்னிலை வகித்தனர். கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனைச் செல்வன் தீர்மான விளக்க உரையாற்றினர். இப்பொதுக் கூட்டத்தில் தொகுதி செயலர்ளர்கள் கலைச்செல்வன், விடுதலை கனல், கலையரசி, வல்லவன், செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச் செல்வன் “நிதி பகிர்வில் தமிழக அரசு ஒன்றிய அரசால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவதாகவும், மூன்று லட்சம் கோடியை தமிழகத்துக்கு கொடுத்ததாக பிரதமர் கூறுவதாகவும், அதே நேரத்தில் பல்வேறு வரிகள் மூலம் ஒன்றிய அரசிற்கு சென்றிருக்கும் தொகை 8.3 லட்சம் கோடி இதுதான் ஒன்றிய அரசின் பாரபட்ச அணுகுமுறையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

தனிநபர் காட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகா தர்மஸ்தலாவில் தோண்டுகிற இடமெல்லாம் இளம் பெண்களின் பிணம் குவிந்து கிடக்கிறது. இது குறித்து வாய்த் திறக்காதவர்கள் தமிழ் நாட்டில் உள்ள இந்து அறநிலைய துறை குறித்து விமர்சனங்களை முன்வைக்கிறார்கள் எனவும் தெரிவித்தார். தமிழ்நாட்டில் உள்ளது போல சிறப்பு கூறு நீதியை பாதுகாக்கும் சட்டம் புதுச்சேரியில் இல்லாததால் பட்டியல் சமூக பழங்குடி மக்களுக்கு சேர வேண்டிய நிதி திசை திருப்பப்படுகிறது எனவும் குற்றஞ்சாட்டினார்.
பட்டியல் சமூகத்திற்கு அப்பட்டமான அநீதி புதுச்சேரியில் இழைக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், புதுச்சேரி முதலமைச்சர் தலித் மக்கள் விரோத போக்கை கைவிட வேண்டும் என தெரிவித்தார்.