தேர்தலில் டெல்லி மக்கள் மாற்றத்தை விரும்பினர். அதனால் அவர்கள் மாற்றத்திற்கான வாக்களித்தனர் என்று காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
டெல்லி சட்டப்பேரவை தேர்தல் கடந்த 5-ம் தேதி நடைபெற்றது. 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலி முன்னாள் முதலமைச்சர் அர்விந்த கேஜ்ரிவால், தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி உள்பட 699 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாஜக இடையே மும்முனை போட்டி நிலவியது. இந்த தேர்தலில் 60.54 சதவீத வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில், டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 47 இடங்களிலும், ஆம் ஆத்மி 23 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை பெற முடியவில்லை. இதன்மூலம், பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் முன்னிலை வகிக்கிறது. புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான கேஜ்ரிவால் தோல்வியடைந்தார். தற்போதைய முதலமைச்சர் ஆதிஷி வெற்றி பெற்றுள்ளார்.
ஆனாலும், பல்வேறு தொகுதிகளில் பாஜக முன்னிலை வகிப்பதால் அக்கட்சியனர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் கேரளா மாநிலம், வயநாட்டில் காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தியிடம் டெல்லி தேர்தல் நிலவரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, “மக்கள் மாற்றத்தை விரும்பினர் என்பது அனைத்து கூட்டங்களிலிருந்தும் தெளிவாகத் தெரிந்தது. அவர்கள் மாற்றத்திற்காக வாக்களித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். நாம் கடினமாக உழைக்க வேண்டும், களத்தில் நிற்க வேண்டும், மக்களின் பிரச்சினைகளுக்கு பதிலளிக்க வேண்டும்” என்று கூறினார்.




