• Tue. May 7th, 2024

பிரதமர் மோடி அவர்களின் செயல் பாரதம் செய்த பாக்கியம்.., புவனேஸ்வரி பீடம் பரத்வாஜ் சுவாமிகள் பெருமிதம்…

ByKalamegam Viswanathan

Jan 25, 2024

பிரதமர் மோடி அவர்களின் செயல் பாரதம் செய்த பாக்கியம் என்று சென்னை புவனேஸ்வரி பீடாதிபதி ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் பெருமிதத்தோடு தெரிவித்தார்.

சென்னை அம்பத்தூர் ஸ்ரீ யோகமாயா புவனேஸ்வரி பீடாதிபதி பரமஹம்ச ஜகத்குரு ஸ்ரீபரத்வாஜ சுவாமிகள் அயோத்தியில் ஸ்ரீ பால ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டதை ஒட்டி மதுரையில், தொடர் ராம நாம ஜெபத்தில் ஈடுபட்டார்.

மதுரை டிவிஎஸ் நகருக்கு வந்துள்ள இவர், கடந்த மூன்று நாட்களாக ஒரே இடத்தில் ஏகாந்தமாக அமர்ந்து அன்னம், ஆகாரம் உண்ணாமல், தொடர் ராம நாம ஜெபம் செய்தார். குரு பாதுகையை இதயத்திலும், கையில் யோக தண்டம் ஏந்தி ‘ராம்..ராம்..’ என லட்சக்கணக்கான முறை முழங்கி, ராம நாம மந்திரத்தை உருவேற்றினார்.

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் நலமாக இருக்க வேண்டும், விவசாயம் செழிக்க வேண்டும், நீர்நிலைகள் வற்றாமல் நிரம்பி வழிய வேண்டும், மக்கள் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும், ஐஸ்வர்யத்தோடும் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனைகளை முன்னிறுத்தி இந்த தொடர் பாராயணத்தில் ஈடுபட்டார்.

இதுகுறித்து பரத்வாஜ சுவாமிகள் கூறும்போது, “ஒரு வில், ஒரு இல், ஒரு சொல் என்பதற்கு உதாரணமாக இருந்த ராமனிடம் வடக்கே குகன், தெற்கே விபீஷணன் என இரண்டு தம்பிகள் அவரிடம் சரணாகதி அடைந்தனர். இவ்விரு திசைகளுக்கும் நடுவே உள்ள அனைவரும் ராமனின் அன்புக்கு பாத்திரமானவர்கள்தான். நம் அனைவரும் கல்யாண குணங்கள் நிரம்பிய ஸ்ரீ ராமபிரானின் குணங்களைப் பெற வேண்டும்.

அயோத்தியில் ஸ்ரீ பால ராமர் கோயில் கட்டியதன் மூலம், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, உலகெங்கிலும் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற முழக்கத்தை ஓங்கி ஒலிக்க செய்துள்ளார். நமது பாரத பிரதமர் மோடி அவர்களின் செயல் பாரதம் செய்த பாக்கியமாக கருதுகிறேன். அயோத்தியில் அமைந்துள்ள கோவிலை பார்க்கும்போது வைகுண்டம், பூலோகத்திற்கு இறங்கி வந்தது போல இருக்கிறது. பல யுகங்களிலும் ஏதேனும் ஒரு நாள்தான் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும். அதனை, மோடி திறம்பட மிகச் சிறப்பாக செய்து காட்டியுள்ளார். கடுமையான விரதங்களை பின்பற்றி அவர் கோயில் பிராணப் பிரதிஷ்டை செய்தது நம் நாடு செய்த பாக்கியம்.”
இவ்வாறு சென்னை அம்பத்தூர் ஸ்ரீ புவனேஸ்வரி பீடம் ஸ்ரீ பரத்வாஜ் சுவாமிகள் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *