மொரீசியஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் விடுத்த அழைப்பின்பேரில் அந்நாட்டிற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக சென்றடைந்தார். அவருக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.
பிரிட்ஷிடமிருந்து மொரீசியஸ் கடந்த 1968 மார்ச் 12-ம் தேதி சுதந்திரம் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்த தினம் மொரீசியஸ் தேசிய தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு இந்த தினத்தில் இந்திய குடியரசு தலைவர் திரவுபதி முர்மு கலந்து கொண்டார். இந்த ஆண்டு இவ்விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க வேண்டும் என்று அந்நாட்டின் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அழைப்பு விடுத்தார். இதையடுத்து 2 நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச்.10) மொரீஷியஸ் புறப்பட்டார்.
இது தொடர்பாக அவர் வெளிட்ட அறிக்கையில் “எனது நண்பர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களின் அழைப்பை ஏற்று, மொரீஷியஸின் 57வது தேசிய தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக நான் மொரீஷியஸுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணத்தை மேற்கொள்கிறேன். மொரீஷியஸ் ஒரு நெருங்கிய கடல்சார் அண்டை நாடு. இந்தியப் பெருங்கடலில் ஒரு முக்கிய கூட்டாளி மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தின் நுழைவாயில் ஆகும். நாம் வரலாறு, புவியியல் மற்றும் கலாச்சாரத்தால் இணைக்கப்பட்டுள்ளோம்.
நமது தொலைநோக்கு சாகர் திட்டத்தின் ஒரு பகுதியாக, நமது மக்களின் முன்னேற்றம் மற்றும் செழிப்பு, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான நமது நீடித்த நட்புறவை வலுப்படுத்தவும், நமது கூட்டாண்மையை அதன் அனைத்து அம்சங்களிலும் உயர்த்தவும், நமது நீடித்த நட்புறவை வலுப்படுத்தவும் மொரீஷியஸ் தலைமையுடன் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன். இந்தப் பயணம் கடந்த காலத்தின் அடித்தளத்தின் மீது அமைந்து, இந்தியா மற்றும் மொரீஷியஸ் உறவுகளில் புதிய மற்றும் பிரகாசமான அத்தியாயத்தைத் தொடங்கும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) மொரீஷியஸ் சென்றடைந்தார். அங்கு அவரை பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் வரவேற்றார். மொரீஷியஸ் தேசிய தினக் கொண்டாட்டதில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அத்துடன் இந்தியாவின் மானிய உதவியுடன் கட்டப்பட்ட சிவில் சர்வீஸ் கல்லூரி மற்றும் சமூக சுகாதார மையங்கள் ஆகியவற்றை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். மேலும் இந்தப் பயணத்தின் போது பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாடுகளிடையே பரிமாறிக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.