• Fri. Apr 26th, 2024

ஜனாதிபதி தேர்தல்: மகாத்மா காந்தியின் பேரனும் மறுப்பு-

ByA.Tamilselvan

Jun 20, 2022

இந்தியாவில் ஜூலை 18ம் தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு முடிவு செய்யப்பட்டு, அதற்கான பணிகளியில் மூத்த தலைவர்கள் இறங்கினர். மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், 17 எதிர்க்கட்சிகள் டெல்லியில் கடந்த 15-ம் தேதி ஆலோசனை நடத்தின. அப்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் அவர் தனக்கு விருப்பம் இல்லை என தெரிவித்துவிட்டார். இதையடுத்து, தேசிய மாநாடு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லாவை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அவரும் தான் போட்டியிடப் போவது இல்லை எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, மகாத்மா காந்தியின் பேரனும் மேற்கு வங்காள மாநில முன்னாள் கவர்னருமான கோபாலகிருஷ்ண காந்தியைபோட்டியிட வைக்கலாமா? என்பது குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அந்தக் கூட்டத்தில் பொது வேட்பாளர் குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில், கோபாலகிருஷ்ண காந்தி, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட மறுப்பு தெரிவித்துவிட்டார். தன்னை விட சிறப்பாக செயல்படும் ஒருவரை பரிசீலனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக கோபாலகிருஷ்ண காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிக உயர்ந்த பதவிக்கு எனது பெயர் பரிசீலிக்கப்பட்டதற்கு நன்றி. எனினும், அனைத்து கட்சிகள் இடையேயும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் வேட்பாளர் ஒருவரை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும்.” என குறிப்பிட்டுள்ளார். கோபாலகிருஷண காந்தி போட்டியிட மறுத்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்கள் நாளை கூடி ஒருமித்த வேட்பாளரை முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *