ராகுல் காந்தியின் அரசியல் எதிர்காலம் தொடர்ந்து மங்கி வருகிறது என்று பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:- இந்திய-சீன எல்லைப் பிரச்னையை குறித்து ராகுல் காந்தி அதிகம் பேசுகிறார். ஆனால், உண்மையில் நேரு
தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான் இந்தியப் பகுதியை சீனா ஆக்கிரமித்தது. தேசத்தை கட்டமைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர் சர்தார் வல்லபபாய் படேல். ஆனால், காங்கிரஸ் கட்சி எப்போதுமே அவருக்கு உரிய மரியாதை அளித்தது இல்லை. தனது நடைப்பயணத்தில் கூட ராகுல் காந்தி படேலுக்கு மரியாதை செலுத்தவில்லை. இந்து மக்களின் நம்பிக்கைக்கு எதிராக ராகுல் காந்தியும், காங்கிரஸும் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. குஜராத் சோம்நாதர் கோயிலை புதுப்பிக்க சர்தார் வல்லபபாய் படேல் முழுஅளவில் களமிறங்க முட்டுக்கட்டை போட்டவர் அப்போதைய பிரதமர் நேரு. அக்கோயிலை அப்போதைய குடியரசுத் தலைவர் ராஜந்திர பிரசாத் மூலம் திறக்கவும் அனுமதிக்கவில்லை.
அன்று முதல் காங்கிரஸின் இந்துமத வெறுப்பு தொடர்ந்து வருகிறது. இந்தியாவுக்கு எதிராக டெல்லி நேரு பல்கலைக்கழகத்தில் கோஷங்களை எழுப்பிய கன்னையா குமார் போன்றவர்கள்தான் ராகுலின் பின்னால் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத உடைகூட அளிக்கப்படவில்லை. ராணுவத்துக்கான ஆயுதக் கொள்முதலிலும் ஊழல் நடைபெற்றது காங்கிரஸ் ஆட்சியில்தான். காங்கிரஸ் கட்சி அடைந்து வரும் தொடர் தோல்விகளால் ராகுல் காந்தி விரக்தியின் உச்சத்தில் உள்ளார். இதன் காரணமாகவே மக்களிடையே அவர் வெறுப்புணர்வை பரப்பி வருகிறார். ராகுல் காந்தி அரசியல் எதிர்காலம் தொடர்ந்து மங்கி வருகிறது என்று அவர் கூறினார்.